இஸ்ரேலிய டாங்கிகள் சிரியாவுக்குள் நுழைவு

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு கவிழ்க்கப்பட்டதை அடுத்து இஸ்ரேலியப் படை நேற்று (08) யுத்த சூன்ய வலயத்தைத் தாண்டி 50 ஆண்டுகளில் முதல் முறை சிரியாவுக்குள் நுழைந்துள்ளது.
இஸ்ரேலிய டாங்கிகள் கோலன் குன்று பகுதியில் இருந்து எல்லை கடந்து சிரியாவுக்குள் நுழைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது தென்மேற்கு சிரிய நகரான குனைத்ராவுக்கு அருகால் யுத்த சூன்ய வலையத்தைக் கடந்து சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேலியப் படைகள் சூடு நடத்தியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலியப் படை உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை.
சிரிய எல்லையை ஒட்டிய பகுதிகளை இஸ்ரேல் இராணுவ வலயமாக அறிவித்திருப்பதாகவும் இதனால் அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வது தடுக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரிய கிளர்ச்சியாளர்களிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிக்க இஸ்ரேலிய படைகள் தயாராகி வருவதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் (07) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1967 போரில் சிரியாவின் கோலன் குன்றின் பெரும் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததோடு 1981 இல் அதனை தனது ஆட்புலத்திற்குள் இணைத்தது.

