புத்தகத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 18% VAT வரியை நீக்குமாறு அரசாங்கத்திற்கு பிரேரணை

இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத VAT வரியை உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கம், இலங்கை நூல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சங்கம், அகில இலங்கை நூல் விற்பனையாளர்கள் சங்கம், இலங்கை எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களும் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்துகிறது.
இவ்விடயம் குறித்து தாம் தற்போது புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்திற்கு பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த சங்கங்கள், சார்க் வலய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே புத்தகத் துறைக்கு 18 VAT வரி அறவிடப்படுவதாகவும், ஏனைய சார்க் நாடுகளில் பூச்சய வீத VAT வரியே அறவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும், அறிவு மற்றும் கற்றல் தொடர்பான மூலதாரங்களுக்கு வரி விதிப்பதால் ஏற்படுகின்ற நிதியியல் மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்புத்வ ஜயந்தி மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

