News

எரிபொருள் நெருக்கடியைத் தவிர்க்க வீட்டிலிருந்து பணியாற்றும் (Work from Home) சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய கிழக்கின் போர் சூழலால் அத்தியாவசிய சேவைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் சூழலுக்கு மத்தியில், இலங்கையில் அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதில் எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இங்கு முக்கியமாக சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்த துறைகளின் தற்போதைய எரிபொருள் தேவை உள்ளிட்ட விடயங்கள் குறித்து அமைச்சின் செயலாளர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி தெரிவித்ததாவது:

• எரிபொருள் இருப்பு: சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்காக பிராந்திய ரீதியாக எரிபொருள் கையிருப்புகளைப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தினார்.

• வீட்டிலிருந்தே பணிபுரிதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியக்கூடிய (Work from Home) சாத்தியக்கூறுகள் குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.

• முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

• டிஜிட்டல் முறைமை: தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையை (Digital Code System) மேலும் முறைப்படுத்துமாறும், அதில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து இற்றைப்படுத்துமாறும் (Update) ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.

மேலும், உருவாகி வரும் புதிய சூழ்நிலைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்குமாறும், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த சவாலையும் கருத்திற்கொண்டு மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்துமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இதற்காக அனைத்துத் தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் விரைவாகச் செயல்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள்:

இந்த நிகழ்வில் வெளிநாட்டு விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் ஹான்ஸ் விஜேசுயிரிய, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களான திலகா ஜயசுந்தர, நாலக கலுவெவ, ஆலோக பண்டார, அனில் ஜாசிங்க, வருண தனபால, கோலித கமல் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Recent Articles

Back to top button