News

இலங்கை சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வெளியாகி வருவது தொடர்பில் நீதிமன்ற உத்தரவையடுத்து, விசாரணைகள் ஆரம்பமானது

இணையத்தில் இலங்கை சிறார்களின் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களைச் சிலர் வெளியிடுவதாக நெக்மெக் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணிக்கத்திற்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை வழங்கினார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘நெக்மெக்’ என்ற இணைய நிறுவனம் உலகின் எட்டு நாடுகளை தங்களது உறுப்பினர்களாக இணைத்துள்ளது என அந்த பணியகம் மன்றுரைத்துள்ளது.

குறித்த நிறுவனத்தில் உறுப்புரிமை பெற்ற நாடுகளில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகள் மற்றும் படங்கள் இணையத்தில் வெளியிடப்படுவது குறித்து அந்த நிறுவனம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான விசாரணைகளில், இலங்கைச் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் படங்கள் கணினியொன்றின் ஊடாகவும் வெளியிடப்பட்டுள்ளமையை அந்த நிறுவனம் கண்டறிந்து அது குறித்து இலங்கைக்கு அறிவித்ததாக அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதுபோன்ற பல முறைப்பாடுகள் கிடைத்து வருகின்ற போதிலும் இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என பணியகம் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளது.

காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், குறித்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button