News

அனுர அலையில் சிக்காத ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

இலங்கையில் சுனாமி அலைக்குப்பிறகு அரசியலில் அடிக்கடி அலைகளைக்காண முடிகிறது. கோட்டாபய ஆட்சியில் ஒரு அலை தோற்றம் பெற்று பின்னர் நாட்டையே உலுக்கியதை யாரும் மறப்பதற்கில்லை.

அதனைத்தொடர்ந்து, அனுரகுமார திசாநாயக்கவை மையப்படுத்தி தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்திய அனுர அலை என்பது ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிக்கு வழிவகுத்தாலும் பெரும்பான்மையில்லாத அலையாக அன்று பார்க்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணிக்கு பாராளுமன்றப்பலத்தைக் கொடுத்து அவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? என்று பார்ப்போம் என்ற தோரணையில் பாரிய அலை ஏற்படுத்தப்பட்ட போது, எதிரணியினர் சோர்வாக இருந்ததால் வாக்களிப்பு வீதம் குறைந்தது. 

அனுர அலை மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமாக 159 பாராளுமன்ற ஆசனங்களை அள்ளிக் கொண்டு போனதைப் பார்த்தோம்.

இந்த அலையில் பேரினக்கட்சிகள் அள்ளுண்டு சென்று ஆசனங்கள் இழந்து நிற்கும் நிலையில், சிறுபான்மைக் கட்சிகளும் அதன் தலைவர்களும் சவால்களை எதிர்கொண்ட நிலையில், சிறுபான்மைத்தலைவர்கள் சிலரும் தோல்விகண்டு, இருந்த ஆசனங்களையும் இழந்தார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 09வது பாராளுமன்றத்தில் 5து ஆசனங்களோடு இருந்தது. அனுர அலையில் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் தான் அதிகமாக இலக்கு வைக்கப்பட்டனர் என்றால் மிகையாகாது.

கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீமைத் தோற்கடிக்க அனுர அலையோடு இணைந்து பலமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன், ஊடகப்பரப்புரைகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஆனாலும், ரவூப் ஹக்கீம் இறை உதவியோடு சவால்களை எதிர்கொண்டு, தளராது நின்று  முதலாமவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

கண்டி மாவட்டத்தில்  போலிப் பிரசாரங்கள், மாயாஜால வார்த்தைகளுக்கு ஏமந்து ரவூப் ஹக்கீமுக்கெதிராக வாக்களித்து, அரச தரப்பில் பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டாலும், கடந்த நாட்களாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுபவமின்மையான செயற்பாடுகளும், அனுபவமிக்க தலைவரான ரவூப் ஹக்கீம் என்ற ஆளுமையின் வெளிப்பாடுகளோடு ஒப்பீட்டுப் பார்ப்பதோடு, ஆளுங்கட்சியில் இருந்தாலும் இவர்கள் தலையாட்டி பொம்மைகள். எதிர்க்கட்சியில் இருந்தாலும் ரவூப் ஹக்கீம் எவ்வளவு முக்கியத்துவமிக்கவர் என உணரத் தொடங்கியுள்ளனர்.

மேலும், அரச தரப்பு முஸ்லிம் அமைச்சர் உட்பட பல்வேறு விடயங்களில் நடந்து கொள்ளும் விதத்தினாலும் முஸ்லிம் சமூகம் அதிர்ப்தியடைந்திருக்கிறது.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் அழிந்தது என எதிரிகளும், துரோகிகளும் கூக்குரலிட்டிருந்த நிலையில், தனது சொந்தச்சின்னத்தில் மூன்று ஆசனங்களைப் பெற்றுள்லதோடு, தலைவரோடு நான்கு ஆசனமாகவிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியோடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஐந்தாவது ஆசனமாகியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படவிருந்த தேசியப்பட்டியல் தாமதமான நிலையில், வேறு நபர்கள் நியமிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதி மன்றம் சென்று தடையுத்தரவைப் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் வேறுவழியின்றி ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் பெயரை முன்மொழிந்திருக்கிறது.

அனுர அலைக்கு பயந்து மூத்த, பலம் பொருந்திய அரசியல்வாதிகள், கடந்த கால ஆட்சியில் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் தேர்தலிலிருந்து ஒதுங்கிய நிலையில், பலமான பலர் போட்டியிட்டு தோல்வி கண்ட போதும். ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் தனது பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டமை ரவூப் ஹக்கீமின் தூரநோக்கு,  ஆளுமையின் வெளிப்பாடாகும்.

By : எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button