News

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக சகோ. ஏ.எல். தவம் ??

ஜனாதிபதி சட்டத்தரணி, சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இதுவரை காலமும் அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக கடமையாற்றியவர். அவர் தலைமைத்துவத்தின் மீது கொண்டிருந்த விசுவாசத்தின் அடிப்படையிலும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையிலும் கட்சித் தலைமையினால் இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் தேசத்தின் முக வெற்றிலையான கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை வென்றெடுக்க முடியாமல் போன பின்னணியில் அவரை பா.உ. ஆக நியமித்தமை கட்சியின் தேசியத் தலைவரின் சாணக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.

நிஸாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து காரணத்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் யாப்பின் 18.10(d) சரத்தின் பிரகாரம் இன்று முதல் அவர் வகித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என்ற பதவி வெற்றிடமாகிறது. கட்சித் தலைவரால் கட்சியின் செயலாளராக நியமிக்கப்படும் நபர் அவரது பதவிக் காலத்துக்குள் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்ற எந்த ஒரு சபையிலும் உறுப்பினராக பதவியேற்க முடியாது என அச் சரத்த்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளமை கட்சிக்குள் புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

நேற்று இது சம்பந்தமாக ஆராய்ந்த கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் புதிய செயலாளராக கட்சித் தலைமைத்துவத்துக்கு மிகவும் விசுவாசமான ஒருவரை உடனடியாக கட்சியின் செயலாளராக நியமனம் செய்வது தொடர்பில் கலந்தாலோசனை நடத்தியுள்ளதாக கூறப்பட்டது.

அதன்போது சம்மாந்துறை தொகுதியைச் சேர்ந்த கட்சியின் பிரதித் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கட்சியின் பொருளாளர் கல்முனை மாநகர முன்னாள் பிரதி மேயர் ரஹுமத் மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோரது பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இம் மூவரில் இருவர் ஏற்கனவே உயர் பீடத்தில் உயர் பதவிகளை வகிப்பதால் ஏ.எல். தவம் பொருத்தமானவராக இருக்கலாம் என்று கருதுவதாக கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளதாகவும் செயலாளர் நியமனம் தொடர்பில் மேலும் தீர்க்கமாக ஆராய்ந்து இன்னும் இரண்டு தினங்களுக்குள்ளாக புதிய செயலாளர் நியமனம் பற்றி தனது முடிவினை தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளாதாக நம்பகமாக அறியமுடிகிறது.

Recent Articles

Back to top button