நோன்பு காலத்தில் (மார்ச்) சாதாரண தர பரீட்சையை நடத்துவது அசௌகரியமானது – அரசாங்கமும், முஸ்லிம் எம்.பிக்களும் இதில் கவனம் செலுத்துங்கள்
நூருல் ஹுதா உமர்
மார்ச் மாதம் நடுப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை நடத்த பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருக்கும் இவ்வேளையில் அந்த காலமானது முஸ்லிங்களின் புனித நோன்பு காலமாக அமைந்துள்ளது. அதனால் இப்பரீட்சையை நோன்பு ஆரம்பிக்க முன்னர் அல்லது நோன்பு பெருநாள் முடிந்த பின்னர் நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா ஜனாதிபதி, கல்வி அமைச்சராக உள்ள பிரதமர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பரீட்சை திணைக்களம் ஆகியவற்றுக்கு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
அல்- மீஸான் பௌண்டஷனின் கோரிக்கை கடிதத்தில் மேலும், உலகில் வாழும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதங்களில் ஒன்றான புனித ரமழான் என்பது அமல்கள் நிறைந்த மாதமாகும். இந்த மாதத்தில் 13 மணித்தியாலயங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் முஸ்லிங்கள் நோன்பு நோற்றிருப்பதுடன் பகலிலும், இரவிலும் இறைவனை அதிகம் அதிகம் தொழும் மாதமாகும். அருட்கொடைகள் நிறைந்த இந்த மாதத்தில் முஸ்லிங்கள் நிறைய நன்மையான காரியங்களை செய்வதுடன் இரவு நேரத்திலும் நீண்ட நேரம் நின்று தொழும் காலமாகும். இந்த காலத்தில் பள்ளிவாசல்கள் சகலதிலும் மார்க்க சொற்பொழிவுகளும், வணக்க வழிபாடுகளிலும் மக்கள் ஈடுபடுவார்கள்.
இப்படியான சங்கை மிகுந்த காலத்தில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை நடத்த பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருப்பது பொருத்தமற்ற செயலாக அமைந்துள்ளது என்ற விடயம் இப்போது முஸ்லிங்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவர்களும், பரீட்சை கடமைக்கு செல்லும் முஸ்லிம் உத்தியோகத்தர்களும் நோன்பு காலங்களில் பரீட்சையை எதிர்கொள்வதும் பரீட்சைக்கு தயாராவதும் உடலியல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும், மார்க்க கடமைகளிலும் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
இதனால் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிங்களின் உணர்வுகளை மதித்து இலங்கை முஸ்லிங்களின் மார்க்கக்கடமைகளையும், கல்வி நடவடிக்கைகளையும் திருப்த்திகாரமாக முன்னெடுக்க இந்த பரீட்சை நேரசூசியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கமும், குறித்த துறைக்கு பொறுப்பான திணைக்களங்களும் முன்வரவேண்டும் என்பதுடன் முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR