சுற்றுலா நகரமான பேங்கொக்கின் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் அதில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலி
பேங்கொக் நகரத்தில் பிரபல சுற்றுலா விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா நகரமான பேங்கொக்கின் கான்சாவோ வீதியில் நேற்று (29) இரவு 6 அடுக்குமாடிகளைக் கொண்ட எம்பர் எனும் பிரபல சுற்றுலா விடுதியில் 5ஆவது தளத்திலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீவிபத்தில் அங்கு தங்கியிருந்த 3 வெளிநாட்டினர் பலியாகியுள்ளனர். தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த தாய்லாந்தின் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து அந்த விடுதியில் தங்கியிருந்த 75 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டுப் பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த மூவரும் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும் தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பேங்கொக் நகர ஆளுநர் சத்சார்ட் சிட்டிபுண்ட், புத்தாண்டு நாளன்று அங்கு நடைபெறவிருக்கும் கொண்டாட்டங்களின் போது கொளுத்தப்படும் பட்டாசுகளை மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டுமென பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்