சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கபட்டது.

2025 சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (04) கொழும்பு சினமன் கிரான்ட் இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண விற்பனை நிலையங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆண்டு ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் 31 வது பதிப்பைக் குறிக்கிறது. இந்நிகழ்ச்சி ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறும்.
சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கு முதன்முறையாக வருகை தரும் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
மேலும், இரத்தினபுரி, எலஹார, பேருவளை, எஹலியகொட, காலி மற்றும் கொழும்பு போன்ற முக்கிய தொழில் மையங்களைச் சேர்ந்த உள்ளுர் மாணிக்கத் தொழில்முயற்சியாளர்கள் தமது சிறப்பான கைவினைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
1 பில்லியன் டாலர் மதிப்பிலான ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதியில் உலகளவில் வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் வணிக வாய்ப்புகளை உருவாக்குவதே கண்காட்சியின் முதன்மை நோக்கமாகும்.
FACETS Sri Lanka என்பது உள்ளூர் மற்றும் உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும், இது இலங்கையின் செழுமையான பாரம்பரியம், பன்முகத்தன்மை மற்றும் இத்துறையில் நிலைத்தன்மை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, தூதுவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.





