News

காட்டுயானையிடம் இருந்து தப்பிக்க தந்தையும் மகனும் ஆற்றில் குதித்த நிலையில், தந்தை மாயம் – மகன் நீந்தி தப்பினார்

கனகராசா சரவணன்

காட்டு பகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் அவருடைய 14 வயது மகனும் காட்டு யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பியோடி ஆற்றில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், தந்தை நீரில் இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளார். மகன் நீந்தி கரைசேர்ந்துள்ளனர். இந்த சம்பவம்  மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) காலையில்   இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகிழவெட்டுவான் உப்போடை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஞானப்பிள்ளை அரணாகரன் என்பவரே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் அவரது 14 வயதுடைய மகனும் காட்ட அண்டிய பகுதிக்கு  விறகு வெட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (05) காலை 9 மணியளவில் சென்றுள்ளனர் .

இதன்போது அங்கு காட்டு யானையை கண்டுவிட்டனர். அதனிடமிருந்து தங்களுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பியோடி அருகே உள்ள முந்தனையாற்றில் குதித்துள்ளனர்.

அவ்வாறு ஆற்றில் குதித்த 14 வயது சிறுவன் நீந்தி கரையை அடைந்துள்ளார். எனினும், தந்தை வெளியே வரவில்லை.  அதனையடுத்து, வீட்டுக்கு தப்பிச் சென்று  சம்பவத்தை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதையடுத்து உறவினர்கள் ,  பொலிஸார், கடற்படையின் உதவியுடன் அந்த ஆற்றுப் பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button