பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ், ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியாது. அப்படியே அறிவித்தாலும் நடத்த முடியாது என ஜனாதிபதி தெரிவிப்பு
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து நேற்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் தனது ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.
அமைச்சர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி ரணில், பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசியலமைப்பில் இடமில்லையென்றும் அப்படி ஜனாதிபதித் தேர்தல் இதற்கு முன்னர் நடந்ததில்லையென்றும் தெரிவித்திருக்கிறார்.
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமனம் பெறவேண்டும். ஆனால் பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்து அரசியலமைப்பு சபை செய்த சிபாரிசு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட முடியாதது. எனவே அரசியலமைப்பு செய்த சிபாரிசை நீதிமன்றம் நிராகரிக்கலாமா என்பது பற்றியும் ஆராயப்படவேண்டியுள்ளது.
இன்னொருபுறம் பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் தேர்தலைக் கூட அறிவிக்க முடியாது. தேர்தலுக்கு தேவையான சிவில் பாதுகாப்பு பொலிஸாரிடம் உள்ளது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து இந்த விடயங்களை ஆராய வேண்டும். அந்த தெரிவுக்குழு ஆராய்ந்து முடிக்கும்வரை ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியாது. அப்படியே அறிவித்தாலும் நடத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் இந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் அரசியலமைப்பு சபையின் அவசரக் கூட்டம் நாளை(26) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. அதன்போது பொலிஸ் மா அதிபரின் பதவி இடைநிறுத்தம், பதில் பொலிஸ் மா அதிபரின் நியமனம் குறித்த விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
இந்தப் பின்ணணியில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படவிருந்தபோதும் அது திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுமா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.