News

வெளிநாட்டினரை பெரிதும் ஈர்த்துள்ள எல்ல புகையிரத டிக்கட்கள் இணையத்தில் வௌியிடப்பட்டு 42 வினாடிகளிலேயே விற்றுத்தீர்ந்தது எப்படி? பின்னணியில் பாரிய மோசடி

வெளிநாட்டினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வரும் மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல வரை செல்லும் ரயிலுக்கான இணையவழி பயணச்சீட்டுகள் (ஈ -டிக்கட்) இணையத்தில் வௌியிடப்பட்டு 42 வினாடிகளில் தீர்ந்துவிட்டதால், இதில் பாரிய அளவிலான மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன  தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், டிக்கட் விற்பனை மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (15) கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இணையவழி ஊடாக அனைத்து இணையவழி பயணச்சீட்டுகளையும் (ஈ -டிக்கட்) வாங்கி, 2,000 ரூபா பெறுமதியான டிக்கெட்டை வெளிநாட்டினருக்கு 16,000 ரூபாவுக்கு விற்கும் குழுக்கள் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு அதிக விலைக்கு ரயில் பயணச்சீட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும், இந்த செயற்பாட்டிற்காக ரயில் நிலைய வளாகத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருப்பவர்களின் உதவி கிடைப்பதாக தகவல்கள் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தின் ஊடாக தொடர்புடைய திகதிக்கு செல்லுபடியாகும்இணையவழி பயணச்சீட்டுகளை (ஈ -டிக்கட்) ஒரு மாதத்திற்கு முன்பே இணையத்தில் வெளியிடுவதாகவும், அவை வெளியிடப்பட்டு 42 வினாடிகளில் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கையில் முறைப்பாட்டை வழங்கும் நபர் சட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்குவோர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தெரிவிப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button