காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
கிட்டத்தட்ட 20 ஊர்களையும் 51 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதே காத்தான்குடி பொலீஸ் பிரிவு! சமூக அரசியல் உரிமைகளிற்கான அமைப்பு (OSPR) ஊடகங்களுக்கு விளக்கம்!
அண்மைக் காலமாக நாடு முழுவதும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் செய்து வருகின்றது.
அந்த வகையில் காத்தான்குடி பொலீஸ் பிரிவும் தங்கள் எல்லைகளிற்கு உற்பட்ட பிரதேசங்களில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு பலரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி வருகின்றனர்.
அவ்வாறு கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பட்சத்தில் குறித்த செய்திகளினை பிரசுரிக்கும் சில ஊடகங்கள் கைதுகள் அல்லது சம்பவங்கள் நடைபெறும் ஊரைக் குறிப்பிடாமல் அல்லது பொலீஸ் பிரிவின் எல்லையினை குறிப்பிடாமல் காத்தான்குடி பொலீஸ் பிரிவிற்குள் அடங்கும் 20 இற்கு மேற்பட்ட ஊர்களில் ஒன்றான காத்தான்குடியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது போன்று செய்தியினை அண்மைக் காலமாக வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான பொறுப்பற்ற செய்தி பிரசுரிப்பினால் கடந்த 30 வருடங்களிற்கு மேலாக யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் குண்டு வெடிப்பு போன்ற சோதனைகளை கண்டு இன்று ஓரளவு சாதாரண நிலைக்கு திரும்பி சுற்றுலாப் பயணிகள் வருகை, வியாபாரம் என்று மீண்டு வரும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான பிழையான தலைப்பிடப்பட்ட செய்திகள் காத்தான்குடி மக்களிற்கு மனதளவில் பாரிய தாக்கத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்துவதை எமது அமைப்பு வெளிக் கொண்டு வருகின்றது.
காத்தான்குடி பொலீஸ் பிரிவு என்பது கல்லடி, நாவலடி, வேலூர், நாவற்குடா, நொச்சிமுனை, பூநொச்சிமுனை, காத்தான்குடி, ஆரையம்பதி, காங்கேயனோடை, கர்பலா, பாலமுனை, கீச்சான்பள்ளம், ஒல்லிக் குளம், மண்முனை, தாழங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தர்மபுரம், வேடக்குடியிருப்பு, உப்போடை போன்ற 20 இற்கு மேற்பட்ட ஊர்களையும், குறித்த ஊர்களில் உள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதே தவிர “காத்தான்குடி” என்ற ஊர் மாத்திரம் காத்தான்குடி பொலீஸ் பிரிவில் அடங்கவில்லை என்பதை ஊடகங்களிற்கும், செய்திகளை வாசித்த பொது மக்களிற்கும் தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
காத்தான்குடி என்று பிழையாக தலைப்பிட்டு சில ஊடகங்களினால் பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் சில செய்திகளானது சம்பவம் தொடர்பானதும், சம்பவம் நடைபெற்ற பிரதேசம் தொடர்பாகவும் சரியான தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை மறைத்து காத்தான்குடி என்று வேண்டுமென்றே தலைப்பிட்டு ஊடக தர்மத்தை மீறும் வகையில் செய்திகளை பிரசுரித்தமையினை வண்மையாக கண்டிப்பதோடு இனிவரும் காலங்களில் செய்திகளை உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் மிக வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் சமூக அநீதிகள் விடயங்களில் சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு(OSPR) மிகக் கவனமாக இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.