முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பிணையில் விடுதலை ..
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல இன்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2014 ஆம் ஆண்டு பிங்கிரிய, நாரம்மல பகுதிகளில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 61 லட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபாய் நிதியைப் பெற்று, அந்த நிதியை அதற்காகப் பயன்படுத்தாமல், அதை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுள்ளது.
அதன்படி, இந்த நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதுடன், பொதுச் சொத்தின் கீழ் வரும் குற்றமாக இருப்பதால், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.