தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா விதானகேவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? – ரவூப் ஹக்கீம்
( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
கொவிட் தொற்று தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தால் நீர் ஊடாக வைரஸ் தொற்று பரவும் என்று குறிப்பிட்டு, முஸ்லிம் சமூகத்தின் மீது வைராக்கியத்துடன் செயற்பட்டு, தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா விதானகேவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சுகாதார துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
நீர் ஊடாக வைரஸ் தொற்று பரவும் என்பது முற்றிலும் தவறானதொரு தர்க்கமாகும். கொவிட் தொற்று காலத்தில் மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டமை தவறானது. சுகாதார தரப்பினரும் முறையற்ற வகையில் செயற்பட்டமை கவலைக்குரியது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்க போவதில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ந்து உரையாற்றுகையில்,
2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொவிட் -19 தொற்று நோய் தொடர்பான ஆய்வுக்கூட பரிசோதனையைத் தொடர்ந்து 6 இலட்சத்து 71 803 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இக்காலப்பகுதியில் 16,817 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளனர்.
அக்காலப்பகுதியில் உலக நாடுகளில் பின்னப்பற்றப்பட்ட வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்ப குழு வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு தீர்மானித்திருந்தது. பிற்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் சுடுகாட்டில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
கொவிட் தொற்றாளர் உயிரிழந்தவர்களில் 13183 சடலங்கள் தகனம் செய்யப்பட்ட நிலையில் , 2021.03.05 ஆம் திகதிக்கு பின்னர் 3634 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. சுகாதார வழிமுறைகளுக்கு அமைய ஓட்டமாவடி பகுதியில் 2992 முஸ்லிம் மதத்தவரின் 287 பௌத்த மதத்தவரின் சடலங்களும், 270 இந்து மதத்தவர்களின் சடலங்களும், 85 கத்தோலிக்க மதத்தவர்களின் சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
தகனம் செய்யப்பட்டவர்களின் வயது,பால், வதிவிட மாகாணம் மற்றும் மாவட்டம், இனம், மற்றும் மத அடிப்படையிலான விபரங்கள் சுகாதார அமைச்சிடம் இல்லை. என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சிடம் தரவுகள் இல்லை என்று குறிப்பிடுவது கவலைக்குரியது. பெயர் தொடர்பான விபரங்கள் காணப்படுமாயின் மதத்தை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
கொவிட் தொற்று காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை ஆகிய பிரதேச மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். இந்த இரு பிரதேசங்களிலும் பெரும்பான்மையாக முஸ்லிம்களே வாழ்ந்தனர்.
இந்த இரண்டு பிரதேசங்களிலும் கொவிட் தொற்றாளர் கண்டறியப்பட்டவுடன் சுமார் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக முழு பிரதேசமும தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்துக்கு உள்ளாக்கப்பட்டது. ஒரு தரப்பினர் வேண்டுமென்று, வைராக்கியத்துடன் செயற்பட்டதால் இவ்விரு பிரதேச மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள் என்பதை அமைச்சர் அறிவாரா, என கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அப்போதைய அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானத்தால் மக்களும் நெருக்கடிக்குள்ளானார்கள், அரச அதிகாரிகளும் நெருக்கடிக்குள்ளானார்கள். அட்டுலுகம பிரதேசத்தில் இருந்து மகப்பேற்று சிகிச்சை அறை மூடப்பட்டு, அப்பிரதேச தாய்மார்கள் பண்டாரகம பகுதிக்கு அழைக்கப்பட்டார்கள். இந்த செயற்பாட்டுக்கு நாங்கள் அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதற்கு சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் இணக்கமாக செயற்பட்டது கவலைக்குரியது.பூகோள வைரஸ் தொற்று பரவலின் போது மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டமை முற்றிலும் தவறானது. வேண்டுமென்றே தவறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இதற்கு நடவடிக்கை எடுப்பற்கு அரசாங்கம் பின்வாங்க போவதில்லை.
இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், தவறான தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டமை வரவேற்கத்தக்கது.கொவிட் தொற்று தாக்கத்தால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
இக்காலப்பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே வைராக்கியத்துடன் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டார்.
உடல்களை அடக்கம் செய்தால் நிலத்தடி நீர் ஊடாக வைரஸ் பரவும் என்றும் குறிப்பிட்டு வைராக்கியத்துடன் செயற்பட்டு, கருத்துக்களை குறிப்பிட்டு உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக செயற்பட்டார். இவருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்னவென்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், நளிந்த ஜயதிஸ்ஸ, நீர் ஊடாக கொவிட் வைரஸ் தொற்று பரவும் என்பது விஞ்ஞானபூர்வமற்றதொரு தர்க்கமாகும். அத்துடன் தவறானது. கொவிட் தொற்று காலத்தில் நியமிக்கப்பட்ட குழு அரசியல் நோக்கத்துக்கு அமைய நியமிக்கப்பட்டது என்பதை குழுவின் உள்ளடக்கத்தின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம் என்றார்.