News

கொழும்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் – ஐஸ் கொள்வனவு செய்ய மொபைல் தொலைபேசியை கொள்ளையடிக்கவே சாரதியை கொன்றோம் என கைதானவர்கள் வாக்குமூலம்

கொழும்பு, வோர்ட் பிளேஸில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், முச்சக்கரவண்டி சாரதியின் கையடக்க தொலைபேசியை கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி கொழும்பு, வோர்ட் பிளேஸில் உள்ள தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இனந்தெரியாத ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.

விசாரணையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் உட்பட பல பொலிஸ் குழுக்கள் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.

சிசிடிவி காட்சிகள் மூலம் விரிவான விசாரணை நடத்திய விசாரணை அதிகாரிகள் நேற்று சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்தனர்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் கோனவில மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.

சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 30 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்த பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் வாடிக்கையாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரையும் தவிர வேறு ஒருவரும் சபுகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து திருடப்பட்ட முச்சக்கரவண்டியொன்றில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை வோர்ட் பிளேஸ் நோக்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வழியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தொலைபேசி அழைப்பில் இருந்தததை பார்த்த சந்தேக நபர்கள் அவரது கைத்தொலைபேசியை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட முறுகளில், ஒருவர் கூரிய ஆயுதத்தால் சாரதியின் மார்புப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

அப்போது, வீதியில் வீழ்ந்த குறித்த சாரதியை, சந்தேகநபர்கள் இணைந்து முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் கைவிட்டு கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கொள்ளையிடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை 4,000 ரூபாவுக்கு அடகு வைத்ததாகவும், அந்தப் பணத்தில் ஐஸ் போதைப்பொருள் கொள்வனவு செய்ததாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பதுடன், கொலைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதம் மற்றும் அவர்கள் வந்த முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்படவுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button