காட்டை அதிகரிக்க போகிறோம் ; அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர்களில் 40% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது 29% ஆக உள்ள வனவள பரப்பை 2030ஆம் ஆண்டுக்குள் 32% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எங்களின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்படாத சுமார் 144 000 ஹெக்டயார்களை புதிதாக காடுகளாக உள்வாங்க எதிர்பார்க்கிறோம்.
மேலும், காடுகளுக்கு அப்பால் மரங்களை நடுவதன் மூலம் மக்களுக்கு பலன்களை வழங்கும் நோக்கில், வன மீள்நடுகை மற்றும் விருட்சப் பாதுகாப்புச் சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதோடு தற்பொழுது சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது.
மேலும், காடுகளை பாதுகாப்பதற்காக, இந்த ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்காத காடுகளைப் பாதுகாக்க, ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை கையாண்டு வருகிறோம். வன எல்லைகள் அடையாளம் காணப்பட்டு, நிரந்தர வன அமைப்பை நிறுவுவதற்காக அவற்றின் எல்லைகளைச் சுற்றி எல்லைத் தூண்கள் நடப்படுகின்றன.
மேலும் சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அதற்காக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் சர்வதேச ரீதியிலும் பாராட்டைப் பெற்றுள்ளன. கடந்த 02 ஆண்டுகளில், 326 ஹெக்டெயார் சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.