அண்மையில் நாட்டில் இடம்பெற்ற 4 கொலை சம்பவங்களின் போது, துப்பாக்கிதாரிகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று உதவி புரிந்த நபர் வெளிப்படுத்திய தகவல்கள்
கல்கிசை பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரால் தற்சமயம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவரும் சந்தேக நபர் ஒருவர், மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 30ஆம் திகதி கல்கிசை அத்திட்டிய பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் கல்கிசை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டு கல்கிசை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து, மறுநாள் சந்தேக நபரை கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெறப்பட்டிருந்தது.
அதற்கமைய, தெஹிவளை பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15 திகதி நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, நவம்பர் மாதம் 13 ஆம் திகதி கல்கிசை பகுதியில் மற்றுமொருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் கடந்த ஜனவரி 7 ஆம் திகதி கல்கிசை பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் குறித்த சந்தேக நபர் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்களின் போது, துப்பாக்கிதாரிகளைக் குறித்த நபரே மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த சந்தேக நபரை தற்போது வெளிநாடொன்றில் உள்ள திட்டமிடப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவர் வழிநடத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பங்களை மேற்கொள்வதற்காக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் மூன்று சம்பவங்களுக்காகவும் தலா 5 இலட்சம் ரூபாவினை பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் கல்கிசை பிராந்திய குற்ற விசாரணை பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.