News

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை – மக்களின் தேர்தல் உரிமையை மீற யாருக்கும் இடமளிக்க மாட்டோம்.

சபாநாயகருடனும் பிரதம நீதியரசருடனும் கலந்துரையாடி பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



தேர்தல் என்பது மக்களின் இறையாண்மையின் ஒரு அங்கம் எனவும் அதனை மீற இடமளிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.



அத்துடன், அரசியலமைப்பின் 106ஆவது சரத்தின் பிரகாரம் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு பூரண ஆதரவை வழங்குவது அனைவரினதும் பூரண கடமை எனவும் தெரிவித்தார்.



ஹோமாகம பஸ்தரிப்பு நிலைய வளாகத்தில்  (27) நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ கொழும்பு மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.



இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:



”புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணத்தினாலும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பயிர்ச் செய்கை மேற்கொண்ட விவசாயிகளினாலும் தான் இன்று நாம் இந்த இடத்தில் இருக்கின்றோம். அந்த இரண்டு குழுக்களும் இல்லாவிட்டால், இன்று நாம் ஒரு நாடாக வெற்றிகரமாக முன்னேறியிருக்க முடியாது. இந்த நாட்டை நாம் பொறுப்பேற்ற போது நாட்டில் நிலவிய நிலைமையை அனைவரும் அறிவோம். நாங்கள் ஒரு கட்சிக்குச் சொந்தமான அரசாங்கமாக செயற்படவில்லை. ஜனாதிபதி என்ற வகையில் அனைவரையும் ஒன்றிணைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்கினேன். எனவே, இந்த அரசாங்கம் சவால்களை ஏற்றுக்கொள்ளும் பலம் கொண்ட அரசாங்கம். உலக நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உதவியுடன் இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஆரம்பித்தோம். நாட்டுக்கு டொலர்களை வழங்கிய புலம்பெயர் சமூகத்தை நாம் மறக்க முடியாது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.



இவ்வாறாக நாம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு வந்திருக்காவிட்டால் இன்று மக்களுக்கு இவ்வாறான சலுகைகள் கிடைத்திருக்காது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய தொழிலாளர்களுக்கு தொழில் ஆரம்பிக்க உதவ வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அன்று நீங்கள் செய்த சேவையினால் தான் இன்று நாட்டு மக்களுக்கு இவ்வாறான நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளது.



சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகள் மற்றும் பிணைமுறி உரிமையாளர்களுடன் கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இதனால் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் மூலம், ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்ட சகல திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிப்பதாக ஜப்பான் அறிவித்தது.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பாரிய திட்டங்களை நிறைவேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும், பல வலுசக்தித் திட்டங்களை செயல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நாம் தற்போது தயாராக உள்ளோம்.



மேலும், சீனாவையும், ஆசிய அபிவிருத்தி வங்கியையும் தங்கள் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இதன்மூலம், இந்த நாட்டில் நிர்மாணத் துறை பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.



நாடென்ற வகையில் எம்மால் மீண்டும் எழுச்சி பெற முடியாது என்று சிலர் நினைத்தார்கள். தேர்தலை நடத்த முடியாது போகும் என்றனர். சர்வாதிகார நிலை உருவாகும் என்றனர். தற்போது தேர்தலை நடத்துகிறோம். இன்னும் சிலர் தேர்தலை நான் ஒத்திவைக்கப் போவதாக கூறினார்கள். தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்பதற்காக முதலில் சென்று கட்டுப்பணம் செலுத்தினேன்.



இந்த நெருக்கடி நிலையில் என்ன நடக்கும் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். பொலிஸ்மா அதிபரை நியமித்த முறை தவறானது என்று கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவசியமானது. அதன்படி, சம்பிரதாய முறைப்படி மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. இது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால் அதேநேரத்தில், பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது. தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உத்தரவு வழங்கப்பட்டதாக வெளிப்டையாக தோன்றலாம்.



இந்த விடயம் தொடர்பில் மறுநாள் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார். அந்த சமயம் சபாநாயகர் பிரசன்னமாகியிருக்கவில்லை. சபாநாயகர் வந்ததும் பிரதமர் அது தொடர்பில் கேள்வி எழுப்பினார். அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்திற்கே சொந்தமானது. எனவே அரசியலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை நீதிமன்றம் ஆராய முடியாது எனவும் இந்த நியமனம் சட்டபூர்வமானது எனவும் சபாநாயகர் அறிவித்தார்.



நியமனம் சட்டவிரோதமானது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மறுபுறம், இது சட்டபூர்வமானது என்று பாராளுமன்றம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 21ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய பிரச்சினையாக மாறலாம். எனவே, இது குறித்து மகாசங்கத்தினருடன் கலந்துரையாடினேன். தேர்தல் ஆணைக்குழுவுடனும் ஆராயப்பட்டது. இதற்குத் தீர்வுகாண வேண்டும் என அனைவரும் தெரிவித்தார்கள். இன்றேல் இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். 

இந்தப் பிரச்சினையை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். பொலிஸ்மா அதிபரின் நியமனத்தையோ, அரசியலமைப்பு பேரவை கூட்டத்தையோ நான் பார்க்கவில்லை. தேர்தல் என்பது மக்களின் இறையாண்மையின் ஒரு பகுதி என்று அரசியல் சாசனத்தின் 4ஆவது பிரிவு கூறுகிறது. அந்த மக்களின் இறையாண்மையை நாம் பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பின் 106 ஆவது பிரிவின்படி, நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜூலை 17 முதல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்தது. இந்தத் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழு ஆதரவை வழங்குவது நம் அனைவரின் கடமையாகும்.



இந்த மேடையில் எனது புகைப்படத்தை பயன்படுத்த முடியுமா என தேர்தல் ஆணையாளரிடம் மனுஷ நாணயக்கார வினவியிருந்தார். அதை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அது எனக்கு பிரச்சினை இல்லை. இவ்வாறான விடயங்களை பேசித் தீர்க்க வேண்டும். ஆனால் நாங்கள் இப்படிச் செயல்படும்போது, தேர்தல் ஆணைக்குழுவிடம் இதுபற்றி விசாரிக்க வேண்டிய கடமை உயர் நீதிமன்றத்துக்கும் இருந்தது. அரசியலமைப்பின் 106 ஆவது பிரிவின் கீழ், பொலிஸ் அதிகாரிகளின் சேவையை பொலிஸ்மா அதிபரின் ஊடாகத்தான் தேர்தல் ஆணைக்குழு பெற முடியும்.  பொலிஸ் மா அதிபர் இல்லை என்றால், அந்த அதிகாரிகளை எப்படி பெற முடியும்? தேவையான எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகளை இந்த வாரம் கோர வேண்டும். பின்னர் கேட்டுப் பெற முடியாது. அந்த நிலையில் தேர்தலை நடத்த முடியாது. எனவே இது மிகவும் முக்கியமான விடயமாகும்.



எனவே, இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆராய வேண்டியது உயர் நீதிமன்றத்தின் முதல் கடமையாகும். இந்த விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டு முடிவெடுப்பதே பாராளுமன்றத்தின் முதன்மைக் கடமையாக இருந்தது. அதை செய்யாததால் தான் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தேர்தலை ஒத்தி வைப்பதை நான் விரும்பவில்லை. செப்டம்பர் 21ம் திகதிக்கு பின்னர் வேறு நாளில் தேர்தலை நடத்த நான் தயாராக இல்லை. இந்த தேர்தலை எப்படியும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள். அது ஒரு பிரச்சினை இல்லை. உங்களுக்கு அந்த உரிமை உள்ளது.



இனி நீதிமன்றம் செல்வதை நிறுத்திக் கொள்வோம். இப்போது நாம் தீர்வு காண வேண்டும். இந்த கண்ணிவெடியை வெடிக்கச் செய்வதா அல்லது செயலிழக்கச் செய்வதா என்பதை நாங்கள் முடிவு செய்ய வேண்டும். இதை வெடிக்க விட முடியாது. இதை பகுதிகளாக பிரித்து செயலிழக்கச் செய்ய வேண்டும். அதற்கு பாராளுமன்றமும், உயர் நீதிமன்றமும் செயல்பட வேண்டும். எனவே, சபாநாயகர் பிரதம நீதியரசரும் கலந்துரையாடி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



காலையில் சபாநாயகருடம் பேசினேன். தான் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், பிரதம நீதியரசரிடம் பேச தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து கலந்துரையாடுமாறு பிரதம நீதியரசருக்கு அறவிக்க இருக்கிறேன். இந்தப் பிரச்சினையை இந்த வாரத்திற்குள் தீர்க்க வேண்டும்.



அரசியலமைப்பின் 04 வது பிரிவின் கீழ், ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர். நாட்டைப் பாதுகாக்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. நாட்டைப் பாதுகாக்க பொலிசார் தேவை. புலனாய்வு பிரிவு, விசேட அதிரடிப்படை செயல்பட வேண்டும். இவையின்றேல் என்ன நடக்கும்?



சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கலந்துரையாடி இந்தப் பிரச்சினையை எப்படியாவது தீர்த்து வைத்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தலை நடத்த உகந்த வகையில் செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button