சுமங்க வித்தியாலய காணியை மீளவும் ஒப்படைக்காவிடின் பிரச்சினை ஏற்படும்

எம்.ஆர்.எம்.வசீம்
தெஹிவளை சுமங்க வித்தியாலயம் அமைந்திருக்கும் இடம் இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் பரம விஞ்ஞானாதி பெளத்த நிறுவனத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட காணியாகும். ஆனால் தற்போது இதனை முஸ்லிம் பாடசாலையாக முன்னெடுத்துச் செல்ல கடந்த அரசாங்கம் அனுமதித்துள்ளது. அதனால் இந்த அரசாங்கம் இதனை தடுத்து பெளத்த நிறுவனத்துக்கு மீள ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு இனப்பிரச்சினைக்கு காரணமாக அமையும் என சிங்ஹல ராவய அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெஹிவளை மீலாத் பாடசாலைக்கு முன்னால் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், தெஹிவளை பிரதேசத்தில் முஸ்லிம்கள் படிப்படியாக குடியேறி அங்கு காணி மற்றும் வியாபார நிலையங்களை வாங்கியது மட்டுமல்லாது தற்போது பெளத்த நிறுவனத்துக்கு சொந்தமான காணிகளையும் பலாத்காரமாக கைப்பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். உலகில் இருந்த பெளத்த நாடுகளுக்கும் இதுதான் நடந்தது. இந்தோனேசியா, மலேசியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் ஆரம்பத்தில் பெளத்த நாடுகளாகும். இலங்கை பெளத்த நாடாக பிக்குகளுடன் ஒன்றாக இணைந்து இருந்ததால் இந்த இனத்தை அழிப்பதற்கு யாருக்கும் முடியவில்லை.
இலங்கையில் எமது காணிகளை உரித்தாக்கிக்கொண்டுள்ளனர். எமது கல்வியை எடுத்துக்கொண்டுள்ளனர். அதில் பிரச்சினை இல்லை. மனிதாபிமான முறையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். பெளத்தர்கள் என்றவகையில் நாங்கள் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டும் இனமாகும். இவ்வாறு செயற்படும் இனத்துக்கு சொந்தமான காணிகளை பலாத்காரமாக பெற்றுக்கொள்ள முயற்சிப்பது தவறாகும். எமது அதிகாரிகளை பிடித்துக்கொண்டு காணிகளை விலைக்கு பெற்றுக்கொண்டது மாத்திரமல்லாது தற்போது பெளத்த அமைப்புகளுக்கு உரித்தான காணிகளையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
தெஹிவளை சுமங்க வித்தியாலயம் என்பது இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் பெளத்த பரம விஞ்ஞானாதி பெளத்த நிறுவனத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையாகும். பரம விஞ்ஞானாதி பௌத்த நிறுவனத்துக்கு இதன் உரிமம் இருக்கிறது. இந்த பாடசாலை தற்போது மூடப்பட்டுள்ளது. இதில் படித்த பழைய மாணவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் இன்று இந்த பாடசாலை மூடப்பட்டுள்ளதால்.இதனை எமது கல்வி அதிகாரிகள் முஸ்லிம் பாடசாலையாக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இது இனப்பிரச்சினைக்கு காரணமாக அமைந்து விடும்.
இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு பாடசாலைகளை வழங்க முடியும். இது அரச அதிகாரிகள் செய்யும் பாரிய குற்றமாகும். முஸ்லிம் மாணவர்கள் இந்த பாடசாலையில் இணைந்து படிப்பதாக இருந்தால் அது பிரச்சினையில்லை.
ஆனால் கடந்த அரசாங்கம் இந்த பாடசாலையை முஸ்லிம் பாடசாலையாக மாற்ற அனுமதி வழங்கியுள்ளது. அதனால் இந்த அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுத்து பௌத்த மக்களுக்கு சொந்தமான இந்த இடத்தை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.- Vidivelli

