முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பொதுஜன பெரமுனவையும் நேசிப்பவர்களாக இருந்தாலும் அதனைவிட இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கிறோம்.
அதற்கமைய, நாட்டில் எதிர்காலத்துக்கான தெளிவான வேலைத்திட்டத்தை முன்வைத்த தேசிய தலைவர் என்ற அடிப்படையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கே அடுத்த தேர்தலிலும் நாட்டை பொறுப்பளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்று (30) தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்தது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. அதனை தவிர ஏனைய விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை. அதற்கிடையில், பொதுஜன பெரமுனவின் மத்திய செயற்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அதன்போது பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.
அதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு ஆதரவை பெற்றுக்கொடுக்குமாறும் கோரி அவரினால் கடிதமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் நாடு பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்து, எம்.பிக்களின் வீடுகளுக்கு தீ வைத்து பல்வேறு வன்முறை நிலைமையை, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததனூடாகவே நிலைமையை சீராக்கினோம்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை பேண பல்வேறு வேலைத்திட்டங்களை பின்பற்றினோம். இத்தனையும் ரணில் விக்கிரமசிங்கவினாலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டது. அதேபோன்று, பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு எதிராக 11 பேர் வாக்களித்திருந்தோம். அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பொதுஜன பெரமுனவையும் நேசிப்பவர்களாக இருந்தாலும் அதனைவிட இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கிறோம்.
நாட்டில் எதிர்காலத்துக்கான தெளிவான வேலைத்திட்டத்தை முன்வைத்த தேசிய தலைவர் என்ற அடிப்படையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கே அடுத்த தேர்தலிலும் நாட்டை பொறுப்பளிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதனடிப்படையில் செயற்படுகிறோம் என்றார்