கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தேடப்படும் இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பாதாள உலக தலைவன் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொன்ற சந்தேகநபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு பொலிஸாரின் உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு சென்ற பெண் சந்தேக நபருடன் தொடர்பிருந்தமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், இன்னும் கைது செய்யப்படாத பெண் சந்தேக நபருடன் தொலைபேசி அழைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் நீர்கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் நீதிமன்ற கடமையில் இருந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.

