மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மொலானா அவர்களது வரலாற்றுப் பங்களிப்பு

AJ.L.VAZEEL, (M.Ed, M.Phil.),
(M.Ed.M.Phil)
Senior lecturer in Professional Education,
P.hd Research Scholar,
South Eastern University of Sri Lanka
அறிமுகம்.
அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்கள் நாடறிந்த கல்விமான், சமூகத் தலைவர் (ஊழஅஅரnவைல டுநயனநச). கொழும்பு ஸாஹிராவில் கற்ற அவர் கலாநிதி ரீ.பி. ஜாயா அவர்களின் மாணவராவார். மருதமுனையில் பிறந்த அவர் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் இலங்கையின் நாலாபுறமும் இருக்கின்ற பல பிரதேசங்களில் பாரபட்சமற்ற கல்வித் தொண்டாற்றி உள்ளார். ஊதவி ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த அவர் அதிபராக, கல்வி அதிகாரியாக பரிணமித்தார். அன்னார் மறைந்து 25.02.2025 அன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவுறுகின்றமையை முன்னிட்டு இன்று வேர் விட்டு பெருவிருட்சமாக தலைநிமிர்ந்து நிற்கின்ற மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் உருவாக்கத்தில் அன்னாரது வரலாற்றுப்பங்களிப்பினை இக்கட்டுரை பகுப்பாய்வு செய்கின்றது.
தரமுயர்த்தப்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் முதலாவது அதிபர்
1978ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்திற்குப்பின் மருதமுனையில் இரண்டாவது மகாவித்தியாலயம் ஒன்று உருவாக்கப்படவேண்டிய தேவை பொதுமக்களாலும் புத்திஜீவிகளினாலும் உணரப்பட்டது. இம்முன்னெடுப்பு தொடர்பாக மருதமுனை மக்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்களும் கருத்து முரண்பாடுகளும் உருவாகி பெரும் இழுபறி நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களினால் 1979.02.28ம் திகதி இடப்பட்ட தரமுயர்வுக்கான அனுமதிக்கடிதம் பாடசாலைக்கு வழங்கப்பட்டது. ஏனைய பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் புதிய மகாவித்தியாலயத்தில் பெற்றோர்களினால் சேர்க்கப்பட்டனர். இந்நிலை மேலும் உக்கிரமடைந்து மருதமுனைக் கிராமம் பிளவுபடும் நிலையேற்பட்டது. இவ்விழுபறி நிலையை சமரசப்படுத்துமுகமாக ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் தலைமையில் சமரசக்கூட்டம் ஐயூப் ஹாஜியார் அவர்களது வீட்டில் 19.03.1979அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள் “புதிய மகாவித்தியாலயத்தின் அவசியம் தற்போது இல்லை” எனும் அணியைத் தலைமை தாங்கினார். பழீல் மௌலான அவர்கள் “புதிய மகாவித்தியாலயம் தேவை, அது மருதமுனையின் கல்வி எழுச்சியை எவ்விதத்திலும் பாதிக்காது மாறாக மருதமுனையின் கல்வி மென்மேலும் அதிகரிக்க புதிய மகாவித்தியாலய உருவாக்கம் வழிசமைக்கும்” எனகோரிநின்ற அணியை தலைமையேற்று வழிநடாத்தி நின்றார். கூட்டத்தின் இறுதியில் புதிய மகாவித்தியாலயம் உருவாக்கப்பட வேண்டும் எனும் வரலாற்றுத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஏ.எம். சமது அதிபர் அவர்கள் தெரிவிக்கின்றார்.
புதிய மகாவித்தியாலயம் உருவாகியமை மக்கள் மத்தியில் எழுச்சியையும் புத்துணர்வையும் ஊட்டி நின்றது. புதிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பேரார்வம் கொண்ட பெற்றோர்களுக்கும் ஷம்ஸ் அபிமானிகளுக்கும் இவ்வெற்றியை முன்கொண்டுசெல்ல அனுபவம் மிக்க வலுவான தலைமைத்துவம் ஒன்று தேவைப்பட்டது. இப்பின்னனியில் தன்னார்வமாக உந்தப்பட்ட சுற்றுவட்டக் கல்வி அதிகாரி பழீல் மௌலான அவர்கள் தரமுயர்த்தப்பட்ட ஷம்சுல் இல்ம் மகாவித்தியாலயத்தின் முதலாவது அதிபராக பொறுப்பேற்றதன் மூலம் அவ்வரலாற்றுப் பாத்திரத்தை அவர் ஏற்றுக்கொண்டார். ஷம்ஸின் முகவெற்றிலையாக அவர் இருந்தார்.கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அதிகாரியாக பணியாற்ற காலப்பகுதியில் இக்கல்லூரிக்கு 24.09.1965 இல் ஸம்ஸ்-உல்-இல்ம் என பெயரிட்டார்.
மிகுந்த சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட ஸம்ஸ் மத்திய கல்லூரி தற்போது நிமிர்ந்து நின்று புகழ் பெற்று தனித்துவமான நிலையை அடைய வலுவான அடித்தளத்தையிட்டு அதனை ஸ்திரப்படுத்திய பெருமை ஆரம்ப அதிபராக நியமிக்கப்பட்ட பழீல் மௌலான அவர்களைச் சாரும். அன்னார் கடமையேற்று சில நாட்களிலே (26.03.1979) ஐந்து புதிய இளைஞர்கள் ஆசிரிய நியமனம் பெற்றனர். அவ் ஐவரையும் தனது சாதுர்யத்தாலும் செல்வாக்கினாலும் ஷம்சுல் இல்ம் மகாவித்தியாலயத்திற்கே மொலானா அவர்கள் பெற்றுக் கொடுத்தார். எஸ்.ஏ.எஸ். தௌபீக்,ஏ.அர்.ஏ றாஸீக், ஏ.அர்.எம். தௌபீக், ரி.எல்.எம். இஸ்மாயில், என்.எம். இஸ்மாயில் ஆகியோர் அவர்களாவர்.
வீ.எம்.இஸ்மாயில் உதவிஅதிபர் அவர்களையும் ஏ.எம். அபூபக்கர் ஆங்கில ஆசிரியர் அவர்களையும் இதே தினத்தில் இடமாற்றம் பெற்றெடுத்தார். 07.05.1979 எஸ். எல்.எம்.ஜலால்டீன் உடற்கல்வி ஆசிரியர் அவர்களையும் ஏ.எம்.ஏ.சமது, ஏ.எஸ். பாரியா இவர்கள் போன்றோரையும் இடமாற்றம் பெற்றெடுத்தார். அதேபோல் கணித, விஞ்ஞான பாடத்திற்கு தேவையான ஆசிரியர்களையும் தனது சாதுர்யத்தினாலும் செல்வாக்காலும் பெற்றெடுத்து ஆசிரியர்வள குறைபாட்டை குறுகிய காலத்தில் நிவர்த்திசெய்தார்.
பெண்கள் கல்வி பெறவேண்டும் மார்க்கக்கல்வியில் கூடிய கரிசனை காட்டவேண்டும் எனும் கொள்கையில் தீவிரமாக செயற்பட்ட அவர் பெண் மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கல்விச்சமூகத்தினதும் இரவுபகலாக செயற்பட்ட தொண்டர்களினதும் பங்களிப்பினை பெற்று இரவோடிரவாக பல நூற்றுக்கணக்கான அடி தூரம் வேலியும் கற்சுவரும் கழிப்பிடங்கள் என்பவற்றையும் அமைத்தார். மேலும் மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தையும் மாணவிகள் விளையாடுவதிலுள்ள அசௌகரியத்தை கருத்தில் கொண்டு கல்முனை பாபுஜீஸ் அனுசரனையில் ஒருமாத காலத்தினுள் கல்லூரி வளாகத்தினுள்ளேயே வலைப்பந்து மைதானம் ஒன்றை அமைத்தார்.
மாலை வேளைகளில் சிரமதான பணிகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், அபிமானிகள் என்போருடன் இனைந்து சிரமதான பணிகளிலும் தன்னையும் ஈடுபடுத்தி ஒட்டு மொத்த ஸம்ஸ் கல்விச்சமூகத்திற்கு பெரும் இயங்கு சக்தியை அவர் அளித்தார். அவ நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஷம்ஸின் எழுச்சி “முளையிலேயே கருகிவிடும்”;, “ஆறுமாதம் கூடத் தாக்குப்பிடிக்காது” என சிலர் எதிர்வுகூறிய போதிலும் பழீல் மௌலான அவர்களின் தலைமைத்துவமும் சாதுர்யமும் எடுத்த சவாலை வெற்றிகொள்ளும் தீரமும் ஷம்ஸ் சமூகத்தின் உணர்வெழுச்சியுடன் ஒன்றித்து அவ் விமர்சனம்களையும் சந்தேகங்களையும் அவர் தவிடுபொடியாக்கி ஷம்ஸை எழுச்சியுறச்செய்தார் என்பது வரலாறாகும்.
சுற்றுவட்டக்கல்வி அதிகாரி எனும் உயர் பதவியிலிலிருந்து விலகி மீண்டும் ஒரு அதிபராக பணியாற்ற முடிவெடுத்தமையானது அவருக்கு பதவிகள் ஒரு பொருட்டல்ல இலக்குகளே முக்கியமானவை எனும் இலட்சியத்தன்மையை துலாம்பரமாக காட்டி நிற்கின்றது. இதற்கான முன்னுதாரணத்தை அவர் அவரது இலட்சிய நாயகர்களுள் ஒருவரான அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.கலாநிதி ரீ.பி. ஜாயா அவர்களின் வேண்டுகோளையேற்று கண்ணியமும் உயர்வுமிக்க சிவில் சேவை அதிகாரி எனும் உயர்பதவியிலிருந்து விலகி கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபர் பதவியை 1948 இல் அஸீஸ் அவர்கள் ஏற்றார்.
ஸம்ஸ் மத்திய கல்லூரியை “நீலக்கடலோரத்தில் ஒரு அலிகார்” என்றே அவர் பழீல் மௌலானா அவர்கள் குறிப்பிடுகிறார். ஷம்ஸ் குறித்து அவருக்குள் ஒரு கனவு குடியிருந்திருக்க வேண்டும். ஷம்ஸில் ஒரு குறுகிய காலமொன்றில் அவரது தலைமையில் புரட்சியொன்று நிகழ்ந்துள்ளமைளை யாரும் மறுத்து விட முடியாது. தனியார் பாடசாலையொன்றாக ஷம்ஸ் இருந்திருக்குமாக இருந்திருக்குமானால் நீண்ட காலம் பணியாற்றி பெரும் சாதனைகளைப் படைத்திருப்பார் என எண்ணத்தோன்றுகின்றது.
ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 35 ஆண்டு கால நிறைவையொட்டி 03.06.1995யில் வெளியிடப்பட்ட எழுவான் சஞ்சிகையில் “நிகழ்வுகளின் வீதியில் தேரோடும் நினைவுகள் எனும் கட்டுரையில் அதிபர் வீ.எம். இஸ்மாயில் அவர்கள் பழீல் மௌலான அவர்களின் அதிபர் கால பணிகளை பின்வருமாறு விளக்குகின்றார்.
“கல்முனை கல்விக்காரியாலய சுற்றுவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த ஜனாப் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலான அவர்கள் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம். ஏ கபூர் அவர்களின் வாய்மொழி அனுமதியுடன் அதிபர் பொறுப்பை ஏற்றார்கள். அன்னாரது தலைமை காப்பரணாக அமைந்தது. என்னையும் ஜனாப் ஏ.எம். அபூபக்கர் (இங்லீஸ்) அவர்களையும் இடமாற்றம் செய்து எடுத்தார். என்னைத் தனது பிரதிஅதிபராக வைத்துக் கொண்டார். புதிதாக ஆசிரியர் நியமனம் பெற்ற ஆறு இளைஞர்களை ஸம்சுல் இல்மில் நியமித்துக் கொண்டார். தொடர்ந்து ஜனாப்கள் எஸ்.எல்.எம் ஜலால்டீன், ஏ.எம்.ஏ.சமது இருவரையும் இடமாற்றியெடுத்தார். 02.04.79யில் ஜனாப் பழீல் மௌலான அவர்கள் உத்தியோக பூர்வமான அதிபராகப் பொறுப்பேற்றார்கள். நான் க.பொ.த.(சா{த) வகுப்பிற்கு தமிழ், சமூகக்கல்வி, வரலாறு ஆகிய பாடங்களைப் படிப்பித்தேன் மாணவர் பெறுபேறும் திருப்தியாக இருந்தது. நினைக்க பிரம்மிப்பாக இருக்கின்றது. மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. தொடர்ந்து ஜனாப்கள் ஐ.எல்.ஏ. றஹீம், எம். ஏ. ஜப்பார், லத்தீப் முகிதீயின் ஆகிய விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும் பழீல் மௌலான அவர்கள் முயன்று கொண்டு வந்தார்கள். க.பொ.த. (உ{த) கலை, வர்த்தக வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாப் ஏ.எல். எம். தாஹீர் முழுப்பாடங்களையும் அதிக சிரமத்திற்கு மத்தியில் கற்பித்தார். பின்னர் ஜனாப் எம்.எம். செயினுலாப்தீன் அவருக்கு உதவியாக வந்தமைந்தார்”.
ஸம்ஸ் மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது அவர்கள்; ஷம்ஸின் வளர்ச்சிப்பாதையில் பழீல் மௌலானாவின் பங்களிப்பினை பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
“1979ல் தரமுயர்த்தப்பட்ட மருதமுனை ஷம்சுல் இல்ம் மகா வித்தியாலயத்தின் முதல் அதிபராய் பொறுப்பேற்று துடிப்புடன் செயற்பட்ட பழீல் மௌலானா அவர்கள் பல்வேறு பற்றாக்குறையுடன் ஓலைக்கொட்டில்களில் இயங்கிய இக்கல்லூரிக்கு வளங்களை பெற்றுத்தருவதற்கும், ஆசிரியர்களை பெறுவதற்கும் துரிதமாக செயற்பட்டார். புதிய ஆசிரியர்களை பெறுவதற்கும், பொருத்தமான ஆசிரியர்களை உள்வாங்குவதற்கும் அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கது. அன்னாருடன் இணைந்து ஷம்ஸில் செயலாற்றும் போது அவரது நிர்வாகத்திறனையும், கண்டிப்பையும், ஆளுமையையும் கண்டு வியந்தேன்”; .
1981ஆம் ஆண்டு ஷம்ஸ்-உல்-இல்ம் மகா வித்தியாலய அபிவிருத்திச்சபை ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானாவுக்கு வழங்கிய சேவைநலன் பாராட்டு விழாவில் அளிக்கப்பட்ட பாராட்டிதழில் பின்வருமாறு அவரது சேவையின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி பதிவிடப்பட்டுள்ளது.
“ஆசிரியராய், அதிபராய், கல்வி அதிகாரியாய்
நாட்டின் பல பாகங்களில் நற்பணி ஆற்றி
கல்முனைக் கல்வி காரியாலயத்தில் கல்வி அதிகாரியாய்
கடமை புரிந்த உங்கள் ஆற்றலும், மதிப்பும், அருந்தொண்டும் நாமறிந்து
மருதமுனைக் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாய்
அமைந்த ஸம்ஸ்உல்-இல்ம் மகா வித்தியாலயத்தை
கட்டியெழுப்பும் கடும் பணிக்கு உங்களை
நாம் அழைத்து வந்து அதன் முதல் அதிபராய் அமரச் செய்தொம்.
ஆதன் மூலம் எங்களது வித்தியாலயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ச்சி மேல் வளர்ச்சி கண்டு வெற்றிமேல் வெற்றிகண்டு
கல்முனை கல்வி மாவட்டத்தில ஓர்
முன்னோடி மஹாவித்தியாலயமாய் உயர்ந்ததுவே.”
மருதூர்க் கொத்தன்
30.10.1981
ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்கள் கொழும்பு ஸாஹிராவில் தொடங்கிய தனது கல்விப் பணியினை 1980ஆம் ஆண்டு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நிறைவு செய்தார்.

