News

40 வருட இஸ்ரேலிய கனவை நிறைவேற்ற, எந்தவித திட்டமிடல்களும் இன்றி ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்து புலிவாலை பிடித்த கதையாக மாறியுள்ள ட்ரம்பின் நிலைமை

By : தில்ஷான் முகம்மத்             40 வருட இஸ்ரேலிய கனவை நிறைவேற்ற, எந்தவித திட்டமிடல்களும் இன்றி ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா, ஈரானில் எதிர்பார்த்த இலக்கான “ஆட்சி மாற்றத்தை” (Regime Change) அடையவில்லை.

யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்த ஆட்சி மாற்றத்திற்கான நிகழ்தகவு கூட இப்போது இல்லை. யுத்தத்தில் தாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ட்ரம்ப் முரசொலி கொட்டுவதற்கு, ஆயத்துல்லாஹ் அலி கமெய்னியின் படுகொலையைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஒரு நாட்டின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அந்த இடைவெளியை நிரப்ப முடியாமல் அரச கட்டமைப்பு முற்றிலும் உருக்குலைந்தால் மாத்திரமே, அதுவும் ஒரு வெற்றியாக கருதப்படும். ஆனால் ஈரானின் அரச கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கும் நிலையில், அலி கமெய்னியின் படுகொலையும் கூட வெற்றியாக கருதப்படாது.

தனது இராணுவ பலத்தின் அரைவாசியை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த யுத்தம் எந்தவொரு பெரிய அடைவுகளையும் எட்டவில்லை. மாறாக, பல பின்னடைவுகளையே சந்தித்திருக்கிறது

1.மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள், தூதரகங்கள், ஏவுகணை எதிர்ப்பு கவசங்கள், ரடார்கள் போன்றவற்றில் பில்லியன் கணக்கில் இழப்புகள்

2. தினசரி யுத்தச் செலவாக சுமார் 1 பில்லியன் டாலர்கள்
3.யுத்த விமானங்கள் உட்பட பல்வேறு இராணுவ தளபாடங்களின் இழப்புகள்.
4.ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் நெருக்கடி
5.வளைகுடா நட்பு நாடுகளை பாதுகாக்க முடியாத நிலை காரணமாக ஏற்பட்ட உறவு விரிசல்கள்

இதற்கும் மேலாக

ஈரான் யுத்தம் தொடரும் ஒவ்வொரு நாளும், அமெரிக்காவின் பொருளாதாரமும் உலக பொருளாதாரமும் சரிவை (Recession) நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது கண்கூடாக தெரிகிறது.

இஸ்ரேலை நம்பி ஆப்பிழுத்த குரங்கைப் போல அமெரிக்கா மாறியிருக்கிறது.

தற்போதைய நிலையில் அமெரிக்காவுக்கு முன்னால் உள்ள தெரிவுகள்:

1. தரைப்படையை அனுப்புதல் (Boots on the Ground)

இந்த யுத்தம் இஸ்ரேலின் நலன்களுக்கானது, நமக்கு தேவையற்றது என்ற அமெரிக்க மக்களின் அபிப்பிராயம் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் அரசியல் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், தரைப்படையை களமிறக்குவது சாத்தியமில்லை.

மாறாக, குர்திய கிளர்ச்சியாளர்களை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சிரியாவில் அமெரிக்காவை நம்பி களமிறங்கிய குர்துகளை பின்னர் அமெரிக்கா கைவிட்ட கசப்பான அனுபவம் காரணமாக, குர்திய மக்களிடையே இதற்கு பெரிய ஆதரவு இல்லை. எனவே இதற்கான சாத்தியமும் மிகவும் குறைவு.

2. வளைகுடா அரபு நாடுகளை இந்த மோதலுக்குள் இழுத்துவிட்டு, தாம் வெளியேறுதல்.

இந்த போருக்குள் வளைகுடா நாடுகளை கோர்த்துவிட அமெரிக்காவும் இஸ்ரேலும் முதல் நாளிலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வளைகுடாவுக்குள் நடந்த சில தாக்குதல்களுக்கு யார் உரிமையாளர் என்பதில் சந்தேகம் நிலவுகிறது.  சில குறிப்பான இலக்குகளை தாம் தாக்கவில்லை என்று ஈரானும் மறுத்துவருகிறது.

அதே நேரத்தில், ஈரானின் சில இலக்குகள் மீது நடந்த தாக்குதலுக்கு சில அரபு நாடுகள் காரணம் என இஸ்ரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

போலியாக பலி சுமத்தும் (False Flag) தாக்குதல்கள்,  இந்த யுத்தத்தை அரபு – பாரசீக மோதலாக அல்லது சியா – ஷுன்னி மோதலாக மாற்றும் முயற்சியாகும்.
இந்த மோதல் அந்த திசையில் திரும்பினால், அது அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலகுவாக வெளியேறும் வழியாக (Exit Gate) மாறும். ஆனால் வளைகுடா நாடுகளின் தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகளை பார்க்கையில், இதற்கான வாய்ப்பும் தற்போது குறைவாக உள்ளது.

3. வழமைபோல ட்ரம்ப் தனது சமூக ஊடக அறிவிப்பின் மூலம் திடீரென யுத்தத்தில் இருந்து வெளியேறுதல்.

ட்ரம்ப் கணிக்க முடியாத ஜனாதிபதி (Most Unpredictable President) என்பதால், பொருளாதார அழுத்தங்கள் குரல்வலையை நசுக்கும் போது இதற்கான வாய்ப்பு இருக்கிறது.

4. இறுதி தெரிவாக ஈரான் மீது அணுகுண்டு தாக்குதலை மேற்கொள்ளுதல்.

ட்ரம்பும் நெதன்யாகுவும் ஒருவகை மனநோயாளிகள் என்பது உலகமறிந்த உண்மை. ஐநா முற்றுமுழுதாக செயலிழந்திருக்கும் நிலையில், இந்த முடிவுக்கு ட்ரம்ப் வரமாட்டார் என்று யாரும் அடித்து கூற முடியாது. இந்த யுத்ததிற்கு எதிராக செயல்படும் பல அனுபவம் வாய்ந்த அமெரிக்க ஊடவியலாலர்கள் /இராஜதந்திரிகள் ட்ரம்ப் இந்த முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்வு கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

எது நடந்தாலும், பல சாம்ராஜ்யங்களால் வெற்றிகொள்ள முடியாமல் போன பாரசீக மண், தற்போதைய உலக ஜாம்பவானுக்கும் முடிவு கட்ட  தயாராகி வருகிறது என்பது மட்டும் நிச்சயம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button