அமைச்சராக இருந்த போது அரசாங்க காணியை 75 மில்லியன் ரூபாவுக்கு விற்ற குற்றச்சாட்டிலேயே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைதாகியுள்ளார் – இந்த மோசடி தொடர்பில் மேலும் ஆறு பேர் கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிக்கு போலியான பத்திரங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் பலரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மக்கள் தொடர்பு அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகள் போலியான பத்திரங்களைப் பயன்படுத்தி தனியாருக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல் : 0.2137 ஹெக்டேர் நிலத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து களனி பிரதேச சபைக்கு 75 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்வின் டி சில்வா நேற்று இரவு பத்தரமுல்ல பெலவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

