பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையிலும் தாம் நாளை காலை 8 மணி வரை வேலை நிறுத்தத்தை தொடர்வோம் என GMOA அறிவிப்பு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடு தழுவிய ரீதியில் நாளை (மார்ச் 13) காலை 08.00 மணி வரை அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடரத் தீர்மானித்துள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்யுமாறு கோரி GMOA இன்று காலை 08.00 மணியளவில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இன்று காலை கல்நேவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
ஊடகங்களுக்கு பேசிய GMOA செய்தித் தொடர்பாளர் டாக்டர் சம்மில் விஜேசிங்க,
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆதரவை காட்டுவதற்காக வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர மருத்துவ சகோதரத்துவம் தீர்மானித்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்யுமாறு கோரி இந்த அடையாள வேலைநிறுத்தம் மட்டுப்படுத்தப்படவில்லை மாறாக சம்பவம் தொடர்பில் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் இலங்கையில் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளதாகத் தெரிவித்த டொக்டர் ஷாமில் விஜேசிங்க, GMOA வின் வேலைநிறுத்தம் சமூகத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையில் இவ்வாறான மிருகத்தனமான சம்பவங்களை நிவர்த்தி செய்வதற்கும் தடுப்பதற்கும் வலுவான செயற்திட்டம் தேவை என GMOA பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

