எதிர்வரும் 15ஆம் திகதி குரங்குகள், விலங்குகளை எண்ணும் அரசின் வேலைதிட்டம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் – முடிந்தால் நாங்களும் அவற்றை எண்ணிக் கூறுகின்றோம் ; நாமல்

எதிர்வரும் 15ஆம் திகதி காலையில் முன்னெடுக்கவுள்ள குரங்குகள், மர அணில்களை எண்ணும் பணி வெற்றியளிக்க அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், தாமும் முடிந்தால் அவற்றை எண்ணிக் கூறுகின்றோம் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
2005ஆம் ஆண்டில் ஒரு கிலோ கிராம் நெல் 8 ரூபாவுக்கே இருந்தது. ஆனால் அன்று அந்த விவசாயிகளுக்கு கௌரவத்தையும் சிறந்த வருமானத்தையும் கொடுப்பதற்காக அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. இதன்போது அரிசியில் தன்னிறைவடையும் நிலைக்கு சென்றது என்றார்.
நெல் களஞ்சியத்திற்கு இருப்பிடம் இன்றி மத்தள விமான நிலையத்தையும் களஞ்சியமாக மாற்றும் நிலைமையும் காணப்பட்டது. இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது விவசாயிகளுக்காக போராட்டங்களை நடத்தியது. அப்போது வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் செயற்படுத்தும் என்று நினைக்கின்றோம். இதன்படி நெல்லுக்கு நியாயமான விலையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

