இன்று முழு நாடும் எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை – உறவுகளை இழந்தவர்களுக்கு நீதி கிடைக்குமா? அநியாயக்காரர்களுக்கு தண்டனை கிடைக்குமா?

அநியாயக்காரர்களை இறைவன் நீண்ட காலங்களுக்கு விட்டுவைப்பதில்லை ஏதாவதொரு வழியில் அவர்களை தண்டித்தே தீருவான் குறைந்த பட்சம் அவர்களை கேவலப்படுத்தி இழிவடையவாவது செய்வான் என்பது வரலாறு முழுக்க நடந்தே வந்திருக்கிறது…
30 வருடங்களாக பட்டலந்த என்றால் என்னவென்பதும் அங்கு என்ன நடந்தது என்பதும் ஆட்சியாளர்களையும், அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் தவிர இந்த நாட்டு மக்களில் எவருக்கேனும் அதுபற்றி தெரிந்திருக்கவில்லை.
அதனால்தான் அல்ஜெஸிராவிற்கு ரணிலை அழைத்து பட்டலந்த பற்றி மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி நிலமையை இறைவன் ஏற்படுத்தினான்.
இன்று முழு நாடும் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் ஆயிரக்கணக்கான உறவினர்கள் இதுகாலவரையும் தேக்கிவைத்திருந்த அச்சங்களை தூக்கியெறிந்து தைரியமாக நீதி கேட்டு முன்வந்திருக்கிறார்கள்.
ஊடகங்களின் முன்பு வந்து பகிரங்கமாக தமது சாட்சியங்களை கூறுகிறார்கள். அரசாங்கம் என்ற ரீதியில் அம்மக்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் அம்மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக நிச்சயம் கிளர்ந்தெழுவார்கள். அப்படியொரு நிலமை ஏற்பட இந்த அரசாங்கம் விடாது என்பதுதான் எமது நம்பிக்கை. கட்டாயம் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கௌரவ ஜனாதிபதி Anura Kumara Dissanayake அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
1987ம் ஆண்டில் நாட்டில் இருந்த 46 சித்திரவதை முகாம்களில் ஒன்றுதான் பட்டலந்த. இது முக்கியம் பெற காரணம் இந்த வதைமுகாம் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கிய ஒன்று என்பதால். இங்கு ரணிலின் பாவனைக்காக 5 வீடுகள் இருந்தன.
1994ல் சந்திரிகா ஜனாதிபதியானதும் பட்டலந்தவில் நடந்தகொடூரங்களை பற்றி விசாரிக்க 1995 – 09- 21 ம் திகதி அன்று ஆணைக்குழுவொன்றை நியமித்தார்.
மூன்று வருடங்கள் ஆயிரக்கான சாட்சிகளையும், அதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகளையும் விசாரித்த ஆணைக்குழு இறுதியாக 1998 – 05 – 22ம் திகதி ஜனாதிபதியிடம் இறுதி தீர்வறிக்கையை சமர்பித்தது.
2000 -03 -16ம் திகதி அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு அது பிரதிகள் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கவும் அதை பாராளுமன்றத்திற்கு அனுப்பவும் கூறப்பட்டது. ஆனால் அது இரண்டுமே நடைபெறாமல் அந்த அறிக்கை மாயமாகிவிட்டது. கடந்த 30 வருடங்களாக அந்த அறிக்கை எங்கிருக்கின்றது என்று தெரியாத நம்பிக்கையில்தான் நேர்காணலில் கூட ரணில் அந்த அறிக்கை எங்கே என்று தைரியமாக கேட்டார். அப்போதுதான் அந்தஅறிக்கையின் கொப்பி ஒன்று அவருக்கு காண்பிக்கப்பட்டது.
அவரின் கெட்ட நேரம் அந்த அறிக்கையின் கொப்பி இலங்கை தேசிய ஆவண காப்பகத்தில் இருந்தது.
இப்போது அது வெளியே வந்து மக்களின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கிறது. அநியாயக்காரர்கள் நீதியினால் இல்லாவிட்டாலும் இறைவனினால் சரி ஒருநாள் தண்டிக்கப்பட்டேதீருவார்கள்.
– By: Razana Manaf

