பசில் ராஜபக்சவுடன் பேசுகின்ற போது வெறும் ஒரு துண்டு பீட்சா உடன் தேயிலை குடித்துவிட்டு தான் நாங்கள் தீர்மானம் எடுத்தோம் ; ஹரீஸ் M.P
பெரியதம்பி முதலாளியின் மகனை காசு கொடுத்து வாங்க முடியாது : தலையை அடமானம் வைத்து சமூக விடுதலைக்காக போராடி பழகியவன் – ஹரீஸ் எம்.பி கல்முனையில் காரசார உரை !
நூருல் ஹுதா உமர்
கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எதிர்கால சந்ததிகளையும், இந்த மண்ணின் மக்களையும் நாங்கள் அடிமையாக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது மார்க்கத்தை இழக்க முடியாது, எமது மைதானத்தை இழக்க முடியாது, ஏன் இந்த கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் உரிமையை இழக்க முடியாது, உரிமைகளை உடமைகளை பறிகொடுக்க முடியாது என்பதற்காக எனது தலையை அடமானம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பான பொதுக் கூட்டத்தில் பிரதான பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலும் ரணிலை பாராளுமன்றத்திற்குள் ஜனாதிபதியாக தெரிவு செய்கின்ற தேர்தலில் கூட தமிழ் கட்சிகள் சேர்ந்து டலஸ் அழக பெருமையுடன் ஒப்பந்தம் புரிந்தது. அந்த அளவுக்கு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழர் ஐக்கிய முன்னணி, விக்னேஸ்வரன், பொன்னம்பலம் போன்ற எல்லோரும் கல்முனை பிரச்சினையை முன்னிருத்தி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இங்கு மாதக்கணக்கில் போராட்டம் நடைபெற்ற போதும் கல்முனை நகரை தமிழர்கள் முற்றுகையிட்ட போதும் ஸ்ரீதரனும், சாணக்கியனும், சுமந்திரனும், செல்வராஜா கஜேந்திரனும், வந்து எமது மண்ணை துண்டாடுவதற்கு முற்பட்ட னர்.
அதே நேரத்தில் பாராளுமன்றத்தில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சென்று கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கடற்கரை பள்ளிவாசல் வீதியால் பிரித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைப் பிரித்து தர வேண்டும் என்று கோரிய போது ஜனாதிபதி சொன்ன விடயம் என்னவென்று தெரியுமா? இதை கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸுடன் பேச வேண்டும். அவருடன் பேசாமல் எந்த உத்தரவாதத்தையும் உங்களுக்கு தர முடியாது என்று. கல்முனை உப பிரதேச செயலகத்தில் நிதி பிரிவை தர வேண்டும், கணக்காளரை நியமிக்க வேண்டும் என்ற போது கூட அதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி ரணில் அவர்கள் அவர்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதன் காரணமாக இந்த மண்ணில் மாதக்கணக்கில் போராட்டம் நடக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஆட்சிக்கு வந்தபோது தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை அவருக்கு அளித்ததினால் உரிமையோடு சென்று அவர்களின் தேவைகளை கேட்டார்கள். கிழக்கு முஸ்லிம்கள் உங்களுக்கு எதிராக வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி நீங்கள் கல்முனை நகரத்தை துண்டாடித்தாருங்கள் நாங்கள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் வாக்குகளை தருகிறோம் என்று கருணாவும், பிள்ளையானும், வியாலேந்திரனும், கூறிய போது இந்த மண்ணின் உரிமை மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தது.
அந்த காலகட்டம் எனக்கு பெரும் சவாலான காலகட்டமாக இருந்தது. நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கின்றோம். அவர்கள் எல்லாம் ஆளுங்கட்சியில் இருக்கின்றார்கள். ஆனாலும் ஆளுங்கட்சியில் அதாஉல்லா, முஷாரப் போன்றவர்கள் செல்வாக்கற்ற
வெறும் எம்.பிக்களாக மௌனமாக வாய்மூடி இருந்து கொண்டிருந்தார்கள். யார் இந்த பிரச்சினையை கோத்தா அரசுடன் பேசி முஸ்லிங்களின் நிலங்களை காப்பாற்றுவது என்று இருக்கின்ற போது. அந்த நேரத்தில் நாங்கள் அவர்களோடு பேசாவிட்டால் கல்முனை பறிபோய்விடும். பறி போனால் மீண்டும் கிடைக்காது என்ற நிலையை உணர்ந்து அவர்களுடன் பேச சென்றோம்.
எனவேதான் அந்த நேரத்தில் முஸ்லிம் சமூகத்தில் ஜனாஸா பிரச்சனை பெரும் பிரச்சினையாக இருந்தது. அந்த நேரத்தில் தான் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டா ஒரு மிருகம் போன்று மனிதாபிமானமே இல்லாது ஜனாசாவை பற்ற வைத்தார். அந்த நிலையிலிருந்து முஸ்லிங்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் மன்றாடினோம், வெள்ளைக்கொடி கட்டி போராடினோம். ஒன்றும் நடக்கவில்லை. 17 முஸ்லிம் நாடுகள் கடிதம் எழுதி கோட்டாவுக்கு அனுப்பியது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஜனாஸா பற்றி சாம்பலாகி கொண்டிருந்தது. எங்கள் இதயங்கள் துடிதுடித்து போய்க் கொண்டிருந்தது. எங்களால் முடிந்த முயற்சிகளை செய்து கொண்டே இருந்தோம். ஆனால் கோட்டாபய ராஜபக்ச கேட்கவில்லை.
ஜனாஸா எரிப்பின் வலி அந்தந்த குடும்பங்களுக்கு மட்டுமே தெரியும். அம்பாறை மாவட்டத்தில் முதல் கொரோனா மரணம். ஒரு வைத்தியரின் தந்தையாகும். அந்த வைத்தியர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணிபுரிபவர். நான் ஒரு வைத்தியர் ஆனாலும் என்னுடைய தந்தையின் ஜனாஸாவை இன்னும் 3 நாட்களில் பற்ற வைக்க போகிறார்கள் என்று அழுது வடித்தார். மர்ஹூம் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்கள் இதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. கொடுங்கோல் ஆட்சி செய்த கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷையுடன் நாங்கள் மீண்டும் போய் பேசினோம். இதற்கு பரிகாரமாக இருபதுக்கு கை உயர்த்துச் சொன்னார்கள். எங்களின் தலைகளை அடமானம் வைத்து சமூக விடுதலைக்கான தீர்மானத்தை எடுத்தோம்.
எனவே இப்படி இருக்கும் சூழ்நிலையில் பெரிய தம்பி முதலாளியின் மகனுக்கு கோடிக்கணக்கில் காசு கொட்டுகிறது என்று சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். 50/100 இளைஞர்களை தூண்டிவிட்டு எனது காரியாலயத்திற்கு கல்லெறிய வைத்தார்கள். இங்கு நகரம் பறிபோகின்றது, அங்கு மையத்து தீயில் வேகுகிறது, கோட்டாவின் முடிவு வரவில்லை. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். இறைவனுக்கு தெரியும் நாங்கள் 20க்கு வாக்களிக்க அவரிடம் காசி வாங்கினோமா? அல்லது அவரிடம் சென்று தேநீர் குடித்துக் கொண்டிருந்தோமா? என்று. நாகூர் ஆண்டகை தர்கா இந்த பள்ளிவாசல் மீது. அல்லாஹ் மீது சத்தியமிட்டு சொல்கின்றோம். பசில் ராஜபக்சவுடன் பேசுகின்ற போது ஒரு வெறும் துண்டு பீட்சா உடன் தேயிலை குடித்துவிட்டு தான் நாங்கள் தீர்மானம் எடுத்தோம். எனது அரசியல் வாழ்க்கையில் என் மண்ணுக்காகவும் இந்த சமூகத்துக்காகவும் நான் பல தியாகங்களை செய்துள்ளேன். இதை இறைவனும், மக்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள் அதனால் தான் நான் நான்கு முறை மக்களின் அமோக வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றுள்ளேன். இறைவன் உள்ளத்தையும், எண்ணத்தையும் அறிந்தவன் அதனால் தான் நாங்கள் சமூக விடுதலைக்காக போராடிய போது இறைவன் எங்களை ஒருபோதும் கைவிடவில்லை – என்றார்.