News

பத்ரு போர்க்களம் – அகிலத்திற்கோர் சேதி.

THE BATTLE OF BADR – இன்று பத்ரு போர்க்கள நினைவு நாள்.

(இந்தப் பதிவை வாசித்துணர உங்களுக்கு 2 நிமிடங்களும் 26 செக்கன்களும் எடுக்கும்)


அது இற்றைக்கு 1443 வருடங்களுக்கு முன்னர் மூண்ட வீரம் திளைத்த போர்க்களம்.

சத்தியத்தையும் அசத்தியத்தையும் கோடு போட்டுக்காட்டிய சரியாத சரித்திரம்.
ஆயுதம் தரித்த ஆயிரமாயிரம் எதிரிகளை வெறும் 313 பேர் வென்றுகாட்டிய அசாத்தியம்.

பித்னாக்கள் தலைவிரி கோலமாய் உலா வந்துகொண்டிருந்த காலம்.
மக்காவில் வசித்து வந்த குறைஷி காபிர்களின் அட்டகாசங்கள் அத்துமீறி எல்லை தாண்டி வளர்ந்து மதீனா வரை செல்லும் அபாயம் தோன்றி இருந்தது.

அப்போது மதீனத்து மண்ணிலே வாழ்ந்து இறை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூதர் முஹம்மத், காபிர்களின் அத்துமீறல்கள் அளவு கடந்து போவதை கண்டு இறைவனின் ஆணையோடு போர் புரிய முடிவு கட்டினார்கள்.

உயிரிலும் மேலான உத்தம தூதர் இமாமுல் அன்பியா ரஹமத்துல் ஆலமின் தூதர் முஹம்மத் அவர்கள் தலைமை கொடுத்து இஸ்லாம் செழிக்க வரலாற்றில் நிகழும் முதலாவது சமர்.

அப்போது ஹிஜ்ரி 2ம் ஆண்டு.

போருக்கான பெரும் படைகளோ ஆளாதிக்கமோ அற்ற சாதாரண அன்ஸாரிகளை கொண்ட சமூதாயத்திலிருந்து ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்துவதற்கு வியூகம் வகுப்பது அத்தனை சுலபமானதல்ல.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் தயங்காத தோழர்களை ஒன்றுகூட்டி
படைபலம் சேர்த்தார்.

இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப்போராட்டத்தில் களம்காண நெஞ்சுரம் கொண்ட நபியின் நேசத்தோழர்களும் அன்சாரிகளும் அணிவகுத்து சேர்ந்தனர். அல்லாஹ் துணையிருந்தான்.

எதிர்முகாமில் காபிர்களின் பல்லாயிரம் குதிரைப்படைகளும், ஒட்டகங்களும் மின்னும் வாள்களும் கவசங்களும் தயார்படுத்தப்பட,

எழுபது ஒட்டகங்களையும் வெறும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷிகளை எதிர்ப்பதற்கு கம்பீர புன்முறுவலோடு தைரியமாய் தயாரானார்கள்.

அல்லாஹ்வின் தூதர் படைக்கு தலைமை கொடுத்தார்.

ரமழான் மாதம் பிறை பதினேழு; போருக்கு தேதி குறிக்கப்படுகிறது.

சத்தியம் வென்றாக வேண்டும்.
இனி இஸ்லாம் நிலைகொள்ள வேண்டுமாயின் இந்தப்போரில் வென்றே ஆக வேண்டும்.

விடிந்தால் சமர். விடிய விடிய சத்தியத்தூதர் இறைவனிடம் இறைஞ்சி மன்றாடினார்.

“இறைவா! எங்களுக்கு துணை புரிவதாக நீ அளித்த வாக்கை நிறைவேற்று. சத்தியத்திற்காகப் போராடும் இந்தச் சிறுகுழு இன்று அழிந்து விட்டால் இனி உலகில் உன்னை வணங்கிட எவரும் இருக்க மாட்டார்கள்’ என உருக்கமாக பிரார்த்தனை செய்தார்கள்.

அபூபக்கர் (ரழி) நபியை நெருங்கி , “அல்லாஹ்வின் உதவி நமக்கு நிச்சயம் உண்டு; கலங்காதீர்கள்’ என்று கட்டியணைத்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

இறைவன் பதிலளித்தான்;
“நீங்கள் உங்கள் இரட்சகனிடம் உங்களை இரட்சிக்கத் தேடிய போது அணி அணியாக உங்களோடு இணைந்து அடுத்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.” (அல்குர்ஆன் 08:09)

அதிகாலை சஹர் நேரம் நோன்பு நோற்றவர்களாக இறைகொள்கையை நெஞ்சத்தில் ஏந்தியவர்களாக ஈமானியப் படையணி புறப்பட்டது.

போர்க்களம் அழைக்கிறது.
பெருங்கொடையாளனின் அருள்மழை பொழிகிறது.
ஈமானியப் படைமுகாம் வீறு கொள்கிறது.
பாதங்கள் உறுதியாகின.

எதிரிகளின் முகாம் சேறு நிறைந்த சகதியாகிறது.

அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர்.
அந்த வகையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக நபியவர்கள் அலி (ரலி), உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள்.

இவர்கள் மூவரும் காபிர்களில் இருந்து வந்த மூவருடன் போரிட்டு ரத்தம் பீரிட்டு பாய அவர்களின் தலைகளை நிலத்தில் உருட்டினர்.

போர் உக்கிரம் கொண்டது. நிலைமை மாற துவங்குகிறது.
குறைஷிகளின் வாள் வீச்சுக்கள் உயர்கிறது.
ஈமானியப் படையணி பின்வாங்குகிறது.
14 நபித்தோழர்கள் ஸஹீதாகுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் நிலைகுலைந்து நிற்கிறார்கள்.
தோல்வியின் ரேகைகள் மெல்ல படர்கின்றன.

இறைவா துணைபுரியாயோ என்று வல்லோனை கெஞ்சுகிறார் படைத்தலைவர் தூதர் முஹம்மத்.

வல்ல நாயன் துணைபுரிந்தான். எதிரிகளின் எண்ணிக்கைகளை குறைவாக காட்டியும், வானவர்களையும் இறக்கியும் வைத்தான் இறைவன்.

ஈமானியப்படை முன்நகர்ந்து எதிரிகளின் பிணக்குவியல்களை கணக்கிட நேரமின்றி சமராடி வெற்றி கண்டது.
எதிரிகள் புறமுதுகு காட்டி ஓடினார்கள்.

சுஜூதுகள் வீண்போகவில்லை.
சுஹதாக்கள் சூழ ஈமானியம் வெற்றியை சுவைத்தது.
சத்தியம் ஓங்கியது. அசத்தியம் அழிந்தே போனது.
மன்றாட்டம் பயனற்றுப்கோகவில்லை.
மன்னிப்பாளன் வல்லோன் கைவிடவில்லை.

மக்காவில் நபி தொழுதபோது ஒட்டக குடலை கழுத்தில் போட்டு சத்திய தூதரை இழிவுபடுத்திய அபுஜஹீலும் அவன் கூட்டமும் வேரறுந்த மரங்களாக மாண்டு போனார்கள்.

இரக்க நாயன் ஆயத்துக்களை இறக்கி வைத்தான்.
“பத்ரில் நடந்த யுத்தத்தில் நீங்கள் எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக் குறைந்தவர்களாயிருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 03:123)

உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ரு களம் மகத்தான வெற்றியையும் மறக்காத பாடத்தையும் சொல்லித்தருகிறது.

பெரும்பான்மை மக்கள் கூட்டம் ஒரு விடயத்தை சரி என்பதால் அது சத்தியமாகிவிடாது. அவர்கள் ஒரு விடயத்தை பிழை என்றால் அது அசத்தியமாகிவிடாது. சத்திய வாதிகள் சிறுபான்மையினராய் இருந்தாலும் இறைவன் அவர்களுடன்தான் இருப்பான்.

றமழான் கரீம்!!

சல்மான் லாபீர்.

(படம் – பத்ரு போர் நிகழ்ந்த போர்க்களத்தின் தற்போதைய தோற்றம்)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button