நோன்புப் பெருநாளானது சகல மக்களுக்கும் அமைதியினையும் மகிழ்ச்சியையும் வழங்குவதுடன் செழிப்பினை அளிக்கும் வளமான பண்டிகையாகவும் அமைய பிராத்திக்கிறேன்.

‘ஈதுல் பித்ர்’; நோன்புப் பெருநாளுக்கான தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் வாழ்த்துச் செய்தி..
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
‘ஈதல் பித்ர்’ என்பது இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான சமயப் பண்டிகைகளுல் ஒன்றாகும். இது ரமழான் மாதத்தில் நோன்பு இருத்தலை முடிக்கும் வகையில் அடையாளப்படுத்தும் முகமாக நடாத்தப்படும் கொண்டாட்டமாகும்.
ரமழான் நோன்பானது (ஸவ்ம்) இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாவதுடன் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக மக்களை
நல்வழிப்படுத்துவதற்காக வேண்டி அல்லாஹ்வின் மகிழ்வுச் செய்தியாக முதன்முதலாக இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு புனித நூலான அல்குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டதும் இந்நோன்பு காலத்திலேயாகும்.
ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமணம் வரையில் உண்ணுதல் மற்றும் குடித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி கிட்டத்தட்ட 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள்.
இதன்போது இஸ்லாமிய அடியார்கள் நோன்பு பிரார்த்தனை மற்றும் கொடைப்பணிகளின் மூலம் தமது சமய பக்தியினையும் அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்துகிறார்கள்.
இது சுய கட்டுப்பாடு, ஒழுக்கம்,இறைவன் மீது கொண்டுள்ள பற்று மற்றும் நெருக்கம், உளத்தூய்மை, தியாக மனப்பான்மை, இரக்கம்,உடல் ஆரோக்கியம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு போன்ற முக்கிய குணங்களை வளரக்கிறது.
அதன்படி இந்த ரமழான் நோன்பு மாதம் நிறைவடைந்ததன் பின்னர் புதிய பிறையினை பார்த்த தினம் (நோன்புப் பெருநாள்) பண்டிகை நாளாக கருதப்படும். அன்று காலை இஸ்லாமியர்கள் ஒன்று கூடி விஷேட பிராத்தனையில் ஈடுபட்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வகையில் வணக்கங்களில் ஈடுபடுவார்கள்.
மேலும் ரமழான் நோன்புப் பெருநாள் பண்டிகைக் காலமானது எமது நாட்டில் பல்வேறு சமய மற்றும் கலாசார சமூகங்களுக்கிடையில் சகவாழ்வினையும் புரிந்துணர்வினையும் கட்டியெழுப்ப சிறந்த வாய்ப்பினை வழங்குகிறது.இது ஒரு மத நிகழ்வு மட்டுமல்லாது தனிப்பட்ட மற்றும் சமூக நல்லிணக்கத்தின் காலகட்டமாகும். இதிலிருந்து எழும் சகவாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை ஆகிய விழுமியங்களே எமது புதிய அரசாங்கத்தின் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்கு வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
மேலும் சமய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர க்கவும் சகல இனங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணகத்தினை கட்டியெழுப்பவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் இஸ்லாமிய சகோதரர்களால் கொண்டாடப்படும் முதலாவது ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் இதுவாகும்.
சிறப்புவாய்ந்த ரமழான் நோன்புப் பெருநாளை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள சகல இஸ்லாமிய அடியார்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளானது சகல மக்களுக்கும் அமைதியினையும் மகிழ்ச்சியையும் வழங்குவதுடன் செழிப்பினை அளிக்கும் வளமான பண்டிகையாகவும் அமைய பிராத்திக்கிறேன்.
முனீர் முளப்பர்
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்.

