News

ICU வில் இருந்த இலங்கை என்ற நோயாளி, ரணில் என்ற விஷேட நிபுணரால் சாதாரண வாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், சில அரசியல்வாதிகளால் மயானத்துக்கே அனுப்பி வைக்கப்படாமல் இருக்க மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்

(எம்.ஆர்.எம். வசீம்)

ஜனாதிபதி எந்த கட்சியையும் பிளவு படுத்தவில்லை. ஆனால் அந்த கட்சிகள் பிளவு பட்டிருந்த காலகட்டத்திலேயே ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றிருந்தார். தற்போதும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே ஜனாபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

காலியில் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாட்டில் கடந்த வருடங்களில் இருந்துவந்த பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இளைஞர் சமூகம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. சில இளைஞர்கள் நாட்டை விட்டு சென்றனர். இந்த நிலை தொடர்ந்து அவ்வாறு இருக்க முடியாது. நாங்கள் இந்த நாட்டை புதிய திசைக்கு கொண்டு செல்ல வேண்டும்.இதற்கு இளைஞர்களின் கருத்துக்கள் ஆலாேசனைகள் தேவையாகும்.

நாடு வங்குராேத்தடைந்து இரண்டுவருட காலத்துக்குள்  நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்த 42 வருட கால அரசியல் அனுபவமே காரணமாகும். என்றாலும் இன்னும் அந்த பணி முடிவடையவில்லை. இலங்கை என்ற நோயாளியை கடந்த இரண்டு வருடங்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களும் விசேட வைத்திய நிபுணரான ரணில் விக்ரமசிங்க என்ற பொருளாதார நிபுணரே சிகிச்சை அளித்து வந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் சிகிச்சை காரணமாக இலங்கை என்ற நோயாளி அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல்வாதிகள் வழமையான போக்கில் பொய் பிரசாரம் மேற்கொண்டு மீண்டும் நாட்டு மக்களை கஷ்டத்தில் வீழ்த்தினால், மிகப்பெரிய ஆபத்தான நிலையே ஏற்படும்.

அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து  சாதாரண வாட்டுக்கு கொண்டுவந்த நோயாளியை தற்போது வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. என்றாலும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பொய் பிரசாரம் மேற்கொண்டு, நோயாளியை மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்தினால், நோயாளியை மயானத்துக்கே அனுப்பவேண்டி வரும்.

அதனால் நாட்டு மக்கள் இதுதொடர்பாக மிகவும் அவதானமாக புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் அரசியல் கட்சிகள் இந்த நாட்டை எந்த திசையை நோக்கி கொண்டு செல்கிறது என்பதை தொடர்பில் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

அரசியல் கட்சிகள் நினைத்த பிரகாரம் பொய் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டி இருக்கிறது. நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விடுபட்டு செயற்பட வேண்டும்.

மேலும் ஜனாதிபதி கட்சிகளை பிளவுபடுத்துவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த கட்சிகள் பிளவு பட்டிருந்த காலகட்டத்திலேயே ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றிருந்தார்.

முன்னர் இருந்த அரசாங்கத்தின் பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமை காரணமாக பதவி விலகினார். அதேபோன்று நிதி அமைச்சர் பதவி விலகினார். அப்போது அந்த கட்சி பலவீனமடைந்திருந்தபோது, அந்த கட்சியை பலப்படுத்தியே ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றார்.

மேலும் வீழ்ச்சியடைந்துள்ள கட்சிகளை பலப்படுத்த, தங்களது தனித்துவத்தை அவ்வாறே பாதுகாத்துக்கொண்டு, நாடு என்ற நிகழ்ச்சி நிரலுக்கு பாதிப்படையாமல் நாட்டின் தேசிய கொள்கை வரைப்புடன் ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி தெரிவித்து வந்தார்.

அதனால்தான் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி முன்வந்திருப்பதும், அனைத்து சக்திகளுக்கும் ஒன்றாக பணியாற்றுவதற்கு வாய்ப்பளிப்பதற்காகும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button