News

இனவாதம் மீண்டும் தலைதூக்குமாயின் அதனை இல்லாதொழிக்க அரசாங்கம் என்ற அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்.

இராஜதுரை ஹஷான்

தையிட்டி, திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகு. இந்த பிரச்சினையை மையப்படுத்தியதாக செயற்படும் வடக்கு அரசியல் மற்றும் தெற்கு அரசியல் நீக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிப்பதில்லை. இனவாதம் இவர்களுக்கு தேவை. தொல்பொருள் ஒன்று கிடைத்தால் அது பௌத்தமா அல்லது இந்துவா என்று ஆராய்வது தவறு. இனவாதம் தோற்றம் பெறுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவு வழங்கிய யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த காலங்களில் தேர்தல்கள் ஊடாக மக்கள் பிரிக்கப்பட்டார்கள். வடக்கு மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளையும், கிழக்கு மக்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும், தெற்கு மக்கள் சிங்கள அரசியல் கட்சிகளையும் தெரிவு செய்தார்கள்.

இதுவே கடந்த கால வரலாறு. இதனூடாக எமது மக்கள் அனைவரும் பிரிக்கப்பட்டார்கள்.ஆனால் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கு,கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள அனைத்து இன மக்களும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தார்கள். இந்த தேர்தலில் மக்கள் ஒன்றுப்பட்டார்கள். நாம் இனி பிரிந்து செல்ல வேண்டிய தேவை கிடையாது. எவரும் சந்தேகத்துடன் வாழ வேண்டிய தேவை கிடையாது.

அனைத்து இன மக்களும் சிறந்த முறையில் வாழும் நாட்டையே நாங்கள் கட்டியெழுப்புவோம்.அனைவருக்கும் சமவுரிமை கிடைக்கப்பெறும்.

யுத்தத்தால் என்ன நேர்ந்தது.? வடக்கு மாகாணம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டது. இழப்புக்கள் மாத்திரமே மிகுதியாகின. வடக்கிலும், தெற்கிலும் இந்த நிலைமையே காணப்பட்டது. இவ்வாறான நிலை மீண்டும் எமக்கு தேவையா,முரண்பட்டுக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது.

எமது தலைமுறை போரிட்டது, முரண்பட்டது. ஆகவே எதிர்கால தலைமுறை போரிடாமலும், முரண்பட்டுக்கொள்ளாமலும் இருக்கும் வகையில் இந்த நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்.இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கு இடமில்லை. அரசியல்வாதிகளுக்கு தான் இனவாதம் தேவை, மக்களுக்கல்ல, யாழ். திஸ்ஸ விகாரையை மையப்படுத்தியதாக பிரச்சினை காணப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற ஆலோசனைசார் கூட்டத்தின்போது ‘திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகு,இந்த பிரச்சினையை மையப்படுத்தியதாக செயற்படும் வடக்கு அரசியல் விலக வேண்டும். இந்த பிரச்சினையை அடிப்படையாக கொண்டு தெற்கில் மேற்கொள்ளப்படும் அரசியல் நீக்கப்பட வேண்டும்.இவ்வாறான அடிப்படையிலான அரசியல் நிலைமை நீக்கப்பட்டால் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்’ என்று குறிப்பிட்டேன். விகாரையின் விகாராதிபதி, அந்த பகுதியில் வாழும் மக்கள், நாக விகாரையின் விகாராதிபதி ஆகியோர் ஒன்றிணைந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிப்பதில்லை. இனவாதம் இவர்களுக்கு தேவை. எந்த மாகாணத்தினதும், மக்களினதும் உரிமைகளை அரசாங்கம் பறிக்கவில்லை.அவ்வாறு ஒருபோதும் செயற்பட போவதில்லை. இந்த நாட்டில் எவ்விடத்தில் தொல்பொருள் சின்னங்கள், அடையாளங்கள் கிடைக்கப்பெற்றாலும் அவற்றை மதம் மற்றும் இன அடிப்படையில் பார்க்ககூடாது. தொல்பொருளாகவே பார்க்க வேண்டும்.

எங்கேனும் பகுதியில் தொல்பொருள் கிடைக்கப்பெற்றால் முதலில் அது சிங்களமா,தமிழா, பௌத்தமா அல்லது இந்து மதத்துக்குரியதா என்றே பார்க்கப்படுகிறது.இது தவறு. தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில் தான் அவற்றை பார்க்க வேண்டும். ஆனால் இனவாதிகள் தொல்பொருள் சின்னங்களை பௌத்தமா அல்லது இந்துவா என்றே பார்க்கிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு இனவாதம் வேண்டும். இனவாதிகளை மக்கள் தோற்கடித்தார்கள்.இருப்பினும் அவர்கள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

இனவாதம் மீண்டும் தலைதூக்குமாயின் அதனை இல்லாதொழிக்க அரசாங்கம் என்ற அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். எமக்கு தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு அவசியம்.யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமான அரசியல் கட்சிகள் இருந்தன. இவ்வாறான நிலையில் தான் வடக்கு மக்கள் எம்மை தெரிவு செய்தார்கள்.இது சிறந்த புதிய மாற்றமாகும்.எம்மீது நம்பிக்கை கொண்டீர்கள். எந்த கடுமையான நிலையிலும் எம்மீது கொண்ட நம்பிக்கையை பலவீனமடைய செய்ய இடமளிக்க போவதில்லை என்றார்.

Recent Articles

Back to top button