எதிர்வரும் தேர்தலில் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 150 ஆசனங்களை கைப்பற்றும் என அறிவிப்பு

நூருல் ஹுதா உமர்
வடபுல மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீது கொண்ட நம்பிக்கையும், தலைவர் றிசாட் எம் மக்கள் மீது கொண்டுள்ள பற்றையும் சகித்துக் கொள்ள முடியாத நாசகார கூட்டம் ஓடோடி திரிவதாகவும், இவர்களது இந்த செயற்பாடுகளுக்கு எமது மக்கள் தகுந்த பதிலடி எதிர்வரும் தேர்தலில் வழங்குவார்கள் என்று மன்னாரைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர், தொழிலதிபருமான முஹம்மட் ரிஷான் ஷேக் அமானி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார். மேலும் இந்த சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் செயற்பாடுகளினால் இன்று எமது மக்கள் நன்மை அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் அவர் வகித்த அமைச்சு பதவிகள் மூலம் வடபுலத்தில் மட்டுமல்ல நாடு தழுவிய முறையில் பாரிய சமூக நல பணிகளை மக்களுக்காக ஆற்றியுள்ளார். குறிப்பாக மாவட்ட அரசியல்வாதிகள் அவர்களது வாக்குகளை மட்டும் தக்க வைத்துக் கொள்ள தமது மாவட்டத்தை மட்டும் பார்க்கின்ற நிலையே காணப்பட்டது. ஆனால் தலைவர் றிசாத் பதியுதீன் அதனை கடந்து மனித நேயமும், மக்களின் தேவைகளையும் தேடிப்பார்த்து அவற்றை செய்கின்ற ஒருவராக இருப்பதினால் மக்கள் அவரை வரவேற்கின்றனர்.
ஆனால் இவ்வாறு மக்கள் அவருக்கு ஆதரவு கொடுக்க முற்படுகின்ற போது அதை சீர்குலைத்து தங்களது சில தேவைகளை பெறுவதற்காக பிறரின் கைக்கூலிகளாக செயற்படுகின்ற சில நாசகார கூட்டம் தேர்தல் காலங்களில் காளான்களை போல முளைத்து தமது திருகுதாளங்கள் செய்வதை தற்போது காணமுடிகின்றது. இந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர, நகர , பிரதேச சபைகளில் 150 ஆசனங்களை கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை இன்று எமது தலைமை போகின்ற இடங்களிலும்,அது போன்று அவருடன் அணி திரளும் மக்கள் அலையினை வைத்து கூறமுடியும்.
எனவே இந்த நாசகார கும்பல்களுக்கு இந்த தேர்தலில் எமது மக்கள் தகுந்த பாடம் புகட்டி அவர்களை அரசியல் அரங்கில் இருந்து அகற்றுவார்கள் என்பது திண்ணம் என்று மேலும் தெரிவித்தார்.

