எனது பெயரை, புகைப்படத்தை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் பிரசாரங்களில் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தக் கோரி, தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் ‘கதிரை சின்னத்தின்’ கீழ் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள், தனது புகைப்படம் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அந்தப் பகுதி முழுவதும் விநியோகித்திருப்பதைக் கண்டறிந்ததாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் தனது புகைப்படத்தை விநியோகிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அத்தனகல்ல மற்றும் பிற பகுதிகளில் ‘கதிரை’ சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் எந்தவொரு பிரச்சாரத்திலும் தனது பெயர் அல்லது புகைப்படத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு இந்தச் செயல்பாட்டை உடனடியாக அறிவிக்குமாறும், தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்

