மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைக்க 119 கோடி ரூபாவுக்கு இன்வாய்ஸ்… அதில் 55 கோடி ரூபாவுக்கு போலி வவுச்சர்கள் என தேசிய கணக்காய்வில் அதிர்ச்சி விவரங்கள் வெளியானது .

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைக்க 119 கோடி ரூபாவுக்கு இன்வாய்ஸ்… அதில் 55 கோடி ரூபாவுக்கு போலி வவுச்சர்கள் என தேசிய கணக்காய்வில் அதிர்ச்சி விவரங்கள் வெளியானது .
இலங்கை கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்துவதற்காக 119.625 கோடி ரூபா மதிப்பிலான இன்வொய்ஸ்களை வழங்கியிருந்தாலும், அதில் 55.703 கோடி ரூபா மதிப்பிலான வவுச்சர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு மூலம் கூட்டுத்தாபனத்தின் விற்பனை மதிப்பு அதிகரிக்கப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
2021 ஒக்டோபர் 26 அன்றைய அமைச்சரவை முடிவின் மூலம் இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
இதற்காக கூட்டுத்தாபனம் 2024 மே 14 ஆம் திகதி வரை 63.922 கோடி ரூபா மதிப்பிலான இன்வொய்ஸ்களை வழங்கியிருந்தது.
இந்த இல்லத்தின் நவீனப்படுத்தல் பணிகளுக்காக எந்தவொரு கொள்முதல் நடைமுறையும் பின்பற்றப்படாமல், ஒப்பந்தமும் இன்றி 1.307 கோடி ரூபா செலுத்தப்பட்டு கட்டட வடிவமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாய்மொழி அறிவுறுத்தல்களின் பேரில், திட்டத்திற்கு தேவையான பொருட்களை பெறுவதற்காக அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 16 சப்ளையர்களிடமிருந்து, போட்டி மூலம் விலை கோரப்படாமல், கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் உத்தரவுகளின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு இன்வொய்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனம், உள்நாட்டு தணிக்கைப் பிரிவுக்கு தகவல்களை வெளிப்படுத்துவதற்காக நிறுவன மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு தெரிவித்துள்ளது.

