இன்று உலக இளைஞர் தினம் -இளைஞர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி
*கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்*
நாம் இளைய சமுதாயத்தை மதிக்க வேண்டும் அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். இளைஞர் மாநாடு நடாத்தி அவர்களை நல்வழிப்படுத்துவது, ஊக்குவிப்பது ஒவ்வொரு நாட்டு தலைவர்களினதும் தலையாய கடமையாகும். ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
உலக சமூகத்தில் இளைஞர்களின் முயற்சிகளை அங்கீகரிப்படல் வேண்டும். தத்தமது சமூகங்களுக்கு சாதகமான பங்களிப்பை வழங்கும் வகையில் அவர்களது செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
15 முதல் 24 வயது வரையிலான பிரிவினரை இளைஞர்கள் என்று ஐ. நா. வரையறுக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் ஒவ்வொரு அரசும் இளைஞர்களுக்கு சரியான, பொருத்தமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இன்று ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் வளர்ச்சிக்கு, இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. ராணுவம், விளையாட்டு, தொழில்நுட்பம், வியாபாரம் என அனைத்து துறைகளிலும் இளைஞர்களே சாதித்து வருகின்றனர்.
ஒரு நாட்டின் எதிர்காலமானது, இளைஞர்களின் கையில்தான் தங்கியுள்ளது. இளைஞர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி ஆகும். இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை, ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்த வேண்டும்.
மனிதனின் வளர்ச்சிக் கட்டங்களைக் கொண்டு மட்டுமல்லாது, பல சிறப்பியல்புகளைக் கொண்டும் தனித்துவமான சமுதாயமாக அடையாளம் காணப்படுபவர்கள் இளைஞர்கள், பல வேறுபாடுகளுக்கு அப்பால், வேறுபட்ட பிரதேச, இன, கலாசார எல்லைகளைக் கடந்து அவர்களுக்கென்று தனித்துவமான சமுதாய உறுப்புரிமையும், இயலுமையும் இருக்கின்றது. இதனாலேதான் தேசிய ரீதியில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் இவர்கள் குறித்த கவனம் மேலோங்கியுள்ளது.
வருடாவருடம் ஓகஸ்ட் 12 ஆம் திகதி 2000 ஆம் ஆண்டு முதல் சர்வதேச இளைஞர் தினம் நினைவுகூரப்பட்டு, இளைஞர் சமுதாயத்திற்கான கொள்கை ரீதியான புதிய சிந்தனைகள் முன் வைக்கப்படுவதனையும் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம்.
2024 இற்கான சர்வதேச இளைஞர் தின தொனிப்பொருள் “நிலையான வளர்ச்சிக்கான இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் பாதைகள் ஊடாக வெற்றி கொள்வோம்” என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கற்றலுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துத்தான் உள்ளது. நல்ல விடயமாக இருந்தாலும், கெட்ட விடயமாக இருந்தாலும் அறிவினைப் பெற்றுக் கொள்ளும் வழிகள் திறந்தே கிடக்கின்றன. ஆனால் அது எல்லா இளைஞர்களுக்கும் கிடைப்பதாக இல்லை. அதேவேளை எல்லா இளைஞர்களுக்கும் எல்லாக் கல்விக்கான வாய்ப்புக்களும் கிடைப்பதாக இல்லை. இதனால் அவர்கள் தமது கற்றலுக்கான தளத்தைத் தெரிவு செய்துகொள்வதில் தோற்றுவிடுகின்றனர். கற்றலுக்கான வாய்ப்புக்கள் இருந்த போதும் அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களுக்கிடையே குறைந்து கொண்டுபோவதனைக் காணலாம். உதாரணமாக நவீன கணனி வலையமைப்பில் எத்தனையோ அம்சங்கள் இருக்க நாள் முழுவதும் நண்பர்களைத் தேடும் இணையத் தளங்களில் மட்டும்தான் இளைஞர்கள் இணைந்திருக்கின்றனர்.
இளைஞர்கள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து விட்டு, நவீன உலகை நோக்கிய இவர்களது பயணத்தில் குற்றச் செயல்களுக்கான வழிகளும், அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதனைக் குறைப்பதிலும் பார்க்க அதற்கான ஆர்வத்தினை அதிகரிக்கும் வகையில், நவீன தகவல் பரிமாற்ற ஊடக வலையமைப்புக்களும் நவீன தொடர்பு சாதனங்களும் இயங்குவதனையும், எண்ணிக்கையில் அதிகரித்து செல்லுவதனையும் இன்றைய உலகில் காணக்கூடியதாக உள்ளது.
இளைஞர்களில் சிலர் குடிவகை, சிகரெட், பாலியல் துஷ்பிரயோகம், கசினோ, சிறுவர் துஷ்பிரயோகம், களவு, கொலை, வீண் சண்டை, சச்சரவுகள் மற்றும் போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கத்திற்கு ஈடுபடுகின்றனர். சமீபகாலமாக பாடசாலை மாணவர்களும் இப் பழக்கத்தில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. சிந்தித்துப் பாருங்கள் தீய பழக்கத்தால் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்ல தங்களது பாசமிகு குடும்பம், சமூகம் பாதிக்கப்படுகிறது. எனவே இளைஞர்களின் ஒழுக்கத்தை நிலைநாட்டி வீடு, நாடு மற்றும் உலகின் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைவோம்.
*கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்*