அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, ஹப்புகஸ்தலாவ அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையில் ஆர்பாட்டம்.
கொத்மலை கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஹப்புகஸ்தலாவ அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை , உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கல்வி திணைக்களத்தைக் கோரி இன்று 12ஆம் திகதி காலை மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், பாடசாலையின் முன்னாள் மாணவர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் பாடசாலையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபர் ஜனாப் எம்.றிசா அவர்கள் 2020ஆம் ஆண்டு முதல் பாடசாலையின் அதிபராக கடமையாற்றுபர் .
அவர் இதற்கு முன்னர் பாடசாலை ஒன்றில் அதிபராக பணியாற்றிய போது இரண்டு பெண் ஆசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது மற்றும் பல நிதி மோசடிகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதே அதிபர் தமது பாடசாலையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், எனவே 700 மாணவர்கள் கல்வி கற்கும் 44 பேர் கொண்ட ஆசிரியர்களைக் கொண்ட அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலைக்கு பொருத்தமான வேறொரு அதிபரை நியமிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட அதிபர் தற்போது அல் மின்ஹாஜ் இல் தனது பாடசாலையின் நிர்வாக கடமைகளை சரியாக செய்யாத காரணத்தினால் பாடசாலையின் கல்வி நிலை தாழ்ந்துள்ளதாகவும், அதிபர் மற்றும் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
போராட்டத்தின் இடையில் வந்த நாவலப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல தடவைகள் பாடசாலைக்குள் நுழைய முற்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.