ஹிஸ்புல்லாஹ்வின் நீண்ட மெளனம் கலைந்தது – இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம் என ஹிஸ்புல்லாஹ் தலைவர் அறிவிப்பு

ஈரானுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம் – ஹிஸ்புல்லாஹ் தலைவர்
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் பொதுச் செயலாளர் நைம் காசிம், நீண்ட மௌனத்தை உடைத்து, இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியை படுகொலை செய்யலாம் என்று கூறியது, இப்பிராந்திய மக்கள் அனைவருக்கு எதிரான “தாக்குதல்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஈரானுடன் ஆழமான உறவுகள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பு அமைதியாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான போரால் ஓரளவு பலவீனமடைந்த இந்த அமைப்பு, லெபனான் எல்லையில் எந்த நடவடிக்கையையும் தொடங்கவில்லை.
“ஹிஸ்புல்லாஹவும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமும், ஈரானின் நியாயமான மற்றும் சுதந்திரமான உரிமைகளுக்கும், அமெரிக்காவின் தீய எண்ணங்கள் மற்றும் இஸ்ரேல் என்ற புற்றுநோய்க் கட்டியின் ஆக்கிரமிப்புக்கும் இடையே நடுநிலையாக இருக்கவில்லை,” என்று காசிம் தெரிவித்தார்.
இந்த அறிக்கை, ஹிஸ்புல்லாஹ் அமைப்பு “இந்த கொடூரமான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை” எதிர்கொள்ள “பொருத்தமானதாக கருதுவதை” செய்யும் என்று கூறி, எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாய்ப்பை திறந்து வைத்துள்ளது.

