மஹிந்த ராஜபக்ஷவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோனதுதான் வரலாறு..
பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எதிர்வரும் 21ஆம் திகதி அதிகளவான மக்கள் எமது கூட்டத்தில் கூடுவார்கள். எனவே அதற்காக நாம் எல்லா வகையிலும் தயாராக உள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக தலை தூக்க முடியாது.இதுதான் வரலாறு.மஹிந்த ராஜபக்ஷவை அரசியலில் இருந்து சிலர் முயற்சி செய்தார்கள் கடைசியில் அவர்களே அழிந்துபோனார்கள்.
அதேபோன்றதொரு விடயம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு கிராம மட்டத்திலேயே அதிகமாக உள்ளது.எம்மை விட்டு சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள் எதிர்காலத்தில் இன்னும் வருவார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அணுகிய சிலர் மீண்டும் கட்சிக்கு வருமாறு கோரியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க மிகக் குறைந்த வாக்குகளை மாத்திரம் பெற்று தேர்தலில் தோல்வியடைவார்.
பொதுஜன பெரமுன ஒரு இளம் ஜனாதிபதி வேட்பாளராக நாமலை களமிறக்கியுள்ளது.எனவே நாமலை சுற்றி அனைவரும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.