புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீடிக்கப்படும் என்பதை கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய உறுதிப்படுத்தினார்.

கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசுகையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு பாடத்தின் கால அளவு 45 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“பாடங்கள் அவசரமின்றி முழுமையாக கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குழு ஆய்வுகள், விளக்கக்காட்சிகள் போன்ற பல பயிற்சி நடவடிக்கைகளை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு கற்பிக்க போதுமான நேரமும், மாணவர்களுக்கு இந்த நடவடிக்கைகளில் அவசரமின்றி பங்கேற்க நேரமும் தேவை,” என்று அவர் விளக்கினார்.
முதலில் பாடசாலைகளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்குவது என்று முன்மொழியப்பட்டிருந்தாலும், பயண வசதிகள் உள்ளிட்ட ஏனைய தளவாட சிக்கல்களை கருத்தில் கொண்டு, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்க முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

