யாசகர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையில் கூட்டம்

(ரிஹ்மி ஹக்கீம்)
கம்பஹா மாவட்ட சமூக பாதுகாப்பு உப குழுக்கூட்டம் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி சுஜீவ வீரசேகர ஆகியோரின் தலைமையில் அண்மையில் (21) இடம்பெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள், அவை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நகர்ப்புற பிரதேசங்களில் யாசகர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் இனங்காணப்பட்ட யாசகர்களை வீடுகளில் சேர்த்தல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்கத்தின் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் இச்சந்திப்பில் குறித்த யாசகர்களும் அரசாங்கத்தின் அனைத்து சமூக நலன்சார் நன்மைகளை பெற்று வருவதாக இதன்போது சமூக சேவை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளுடன் யாசகம் கேட்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் அவை நடைபெறுவதாகவும் வீதி சிறார்கள் தற்போதும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு எவ்வித வாழ்வாதாரமும் இல்லாவிடின் அது தொடர்பாக கிராம மட்டத்திலுள்ள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு குழு மற்றும் முதியோர் அமைப்பு போன்றவற்றின் ஊடாக அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கம்பஹா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், சமூக பாதுகாப்பு தொடர்பான உத்தியோகள், சமூக சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

