188 பயணிகளுடன் இந்தியாவில் இருந்து கட்டாருக்கு சென்ற எயார் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியது.

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தோஹாவுக்குச் சென்ற எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று (23) புதன்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் மீளத் திரும்பியதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விமானத்தில் பணியாளர்கள் மற்றும் விமானிகள் உட்பட 188 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.07 மணியளவில் கோழிக்கோட்டில் இருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்திருந்த நிலையில், கேபின் எயார் கண்டிஷனிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை 11.12 மணிக்கு மீண்டும் தரையிறங்கியது.
விமானம் திரும்பியவுடன் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட எயார் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் “முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும்” மதியம் 1.30 மணிக்குள் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதுவரை நேரமும் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாகவும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்

