இலங்கையில் கல்வி முறையில் புரட்சிகர மாற்றம் : பரீட்சையை நோக்கிய கல்வி முறையிலிருந்து தரமான கல்விக்கு மாற்றப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

இலங்கையில் கல்வி முறைமை தேர்ச்சி அல்லது தோல்வியை மட்டுமே மையப்படுத்தியதாக இருப்பதை மாற்றி, தரமான கல்வியை வழங்குவதற்கு மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (23) இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 2026ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் இவ்வாறு கூறினார்.
“நாம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் பரீட்சைகளை மையமாகக் கொண்ட கல்வி முறைமைக்கு பழகிவிட்டோம்.
ஆனால், புதிய தொகுதி அடிப்படையிலான (module-based) முறைமையின் கீழ், மாணவர்கள் பலவகையான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கு உட்படுவார்கள்,” என பிரதமர் விளக்கினார்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ், G.C.E. சாதாரண தரப் பரீட்சை 2029ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும். 2026ஆம் ஆண்டு முதல் 1ஆம் மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு தொகுதி முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
“இந்த முறைமையை மதிப்பிடுவதற்கு எங்களுக்கு மூன்று ஆண்டுகள் உள்ளன. எதிர்கால தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களைச் செய்ய நாம் தயாராக உள்ளோம்.
இந்த சீர்திருத்தங்கள் இறுதியானவை என நாம் ஒருபோதும் கூறவில்லை. எதிர்கால முன்னேற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யவும், அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைகளையும் வரவேற்கவும் நாம் தயாராக உள்ளோம்,” என பிரதமர் தெரிவித்தார்.
வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைக்க வேண்டிய அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். முன்னர் அரசியல் அனுமதிகள் காரணமாக சில வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு மேல் இருந்ததாகவும், இனி அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை நீக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், முதலில் பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் எனவும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
மேலும், ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை கல்வி அமைச்சின் நேரடி மேலாண்மையின் கீழ் கொண்டுவரவும், ஆரம்பகால கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் முன்மொழிகின்றன.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, ஆசிரியர் பயிற்சி இந்த சீர்திருத்தங்களின் முக்கிய கவனம் எனவும், ஆகஸ்ட் மாதம் புதிய பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் மேலதிக விளக்க கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

