பாடசாலை நேரத்தை அதிகரிப்பது உள்ளிட்ட அரசின் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிப்பை வெளியிட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கம் அரசின் கல்வி சீர்திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு.
அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் ஆலோசனையின்றி அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்கையில் முரண்பாடுகள் உள்ளதாகவும், மாணவர்களுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “இந்த சீர்திருத்தங்களுக்கு நாங்கள் முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இவை புதியவை அல்ல, ஏற்கனவே பேசப்பட்டவைதான். கல்வி அமைச்சர் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால், இவ்வாண்டு அவரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒரு வகுப்புக்கு 40 மாணவர்களை அனுமதிக்கிறது. இது எவ்வாறு ஒருமைப்பாடு உள்ளதாக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், சீர்திருத்தங்கள் தேசிய கல்வி ஆணையத்தால் உருவாக்கப்பட வேண்டும், ஆனால் தேசிய கல்வி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நிறுவனத்துக்கு முழுமையான தொலைநோக்கு இல்லை எனவும் ஸ்டாலின் விமர்சித்தார். “இந்த சீர்திருத்தங்களை உருவாக்கிய குழு தேசிய கல்வி நிறுவனத்தில் உள்ளது. அவர்களுக்கு எந்தவித தொலைநோக்கும் இல்லை,” என்று அவர் கூறினார்.
“ஜனாதிபதி பாடசாலை இடைவிலகல்கள் குறித்து பேசினார். ஆனால், இந்த சீர்திருத்தங்கள் மாணவர்களின் இடைவிலகலை மேலும் அதிகரிக்கும்,” என்று அவர் எச்சரித்தார்.
பாடசாலை நேரத்தை நீட்டிக்கும் முன்மொழிவுகளையும் ஸ்டாலின் எதிர்த்தார். “ஆசிரியர்கள் மாலை 2 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இத்தகைய தன்னிச்சையான முடிவுகளுக்கு நாங்கள் முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

