புதிய கல்வி மறுசீரமைப்பில் மாணவர்களுக்கு இரண்டு இன்டர்வெல்கள் (அனைத்து மாற்றங்கள் பற்றிய விபரங்களும் இணைப்பு)

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தவணைப் பரீட்சை முறையை இரத்து செய்யவும் காலை 7.30 மணி முதல் 2.00 மணிவரை பாடசாலை கற்றல் நடவடிக்கை இடம்பெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கு இரு ஓய்வு நேரங்களைப் பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதன்போது, தவணைப் பரீட்சையை படிமுறையாக நீக்கி மொடியுலர் (Moduler) முறையின் கீழ் (பாட உள்ளடக்கத்தை சிறிய அலகுகளாக பிரித்தல்) மாணவர்களின் வெற்றிகரமான கல்வி நிலையை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை முறையை நீக்குமாறு கல்வித் துறையைச் சேர்ந்த விசேட நிபுணர்களினால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் நேரங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் ஓய்வு நேரம் போதாது என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய காலை 10.10 மணிமுதல் 10.30 மணிவரையும் பகல் 12.10 மணி முதல் 12.20 மணிவரை இரு ஓய்வு நேரங்களைப் பெற்றுக்கொடுக்குமாறும் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசோக த சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 50 நிமிடங்கள் வரை அதிகரிக்கும் பாட நேரத்தை மாணவர்களால் பொறுத்துக்கொள்வதில் அசெளகரியம் ஏற்படும் என்பதால் இவ்வாறு இரு ஓய்வு நேரங்களைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பிரதி பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாட நேர அட்டவணை காலை 7.40 – 8.30, 8.30 9.20, 9.20 – 10.10, 10.30 – 11.20, 11.20 – 12.10 பகல் 12.20 – 1.10, 1.10 – 2.00 மணி என்ற அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலாநிதி அசோக த சில்வா, புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் ஆரம்பக் கல்விக்கு அறிவியல் தோற்றம், தாய் மொழி, ஆங்கில மொழி, இரண்டாம் மொழி, கணிதம், சமயம், மதிப்புக் கல்வி, சுற்றுச் சூழல் செயற்பாடுகள், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய கல்வி மற்றும் ஒரு அழகியல் பாடமும் உள்ளடங்குமென குறிப்பிட்டுள்ளார்.
06 – 09 ஆம் தரம் மற்றும் 10, 11 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 14 பாடங்களை கற்கக்கூடியதாக இருக்குமென தெரிவித்துள்ள பிரதி பணிப்பாளர் நாயகம், 06 – 09ஆம் தரங்களில் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக அந்தந்தப் பாடங்களுக்கு மொடியுலர் முறையில் பாட உள்ளடக்கங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்

