News

மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்து சென்று பெண்களிடம் கைப்பை, மொபைல் போன்றவற்றை கொள்ளையடித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரின் மகனும் அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் வந்த அவரின் நண்பனும் கைது

பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர், மற்றைய இளைஞர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என்று கூறப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் இருந்து சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி, 5 நவீன கையடக்க தொலைபேசிகள், 15 ஸ்மார்ட் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சாதனங்களின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட போலி எண் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள், முகத்தை முழுமையாக மறைக்கும் இரண்டு முகக்கவசங்கள், 10,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், பெண் கைப்பை மற்றும் இரண்டு பெரிய பைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், நாள் ஒன்றுக்கு 20 பெக்கட் போதைப்பொருட்களை உட்கொள்வதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் நபர்களை இலக்கு வைத்து, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை சோதனை செய்யும் விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் கடந்த 23ஆம் திகதி மாலை பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, போகுந்தர பகுதியில் பொலிஸாரினால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டனர்.

இதன்போது, குறித்த இருவரும் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்ததால் அவர்களை துரத்திச் சென்று, பாதையை தடுத்து பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடுகளில் இருவேறு இலக்கங்கள் காணப்பட்டுள்ளது.

மேலும், இவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியதில், கடந்த இரண்டு மாதங்களாக இந்த திருட்டுகளில் இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது.

பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரளை, அதுருகிரிய, தலங்கம மற்றும் பிலியந்தலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை திருடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் பெண்களின் பைகளைக் கொள்ளையடித்து, அதிலிருந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை எடுத்துவிட்டு, பைகளை பொல்கொட ஆறு மற்றும் பல்வேறு காட்டுப் பகுதிகளில் வீசியுள்ளதாக குறிப்பிட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட இருண்டு பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட 10இற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளை மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றிற்கு உதிரிப் பாகங்களுக்காக விற்பனை செய்துள்ளதாகவும், ஏனைய கையடக்க தொலைபேசிகளில் உள்ள பெறுமதியான பாகங்களை மாத்திரம் அகற்றி அவற்றையும் அங்கு விற்பனை செய்துள்ளதோடு, அதன் ஊடாக பெறப்பட்ட பணத்தை கொண்டு போதைப்பொருள் வாங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பெறுமதியான பாகங்கள் கழற்றி அகற்றப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் உள்ள மகனின் அறையில் இருந்தும், மொரட்டுவ பகுதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் வைத்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான 25 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker