நாமல் ராஜபக்ஷவுக்கு நேரம் சரியில்லையா? நெல்சன் மண்டேலாவை 19 முதல் 22 வருட காலம் சிறையில் வைத்திருந்தனர்.. அவர் அந்நாட்டின் ஜனாதிபதி ஆனார் என்பதை மறக்க வேண்டாம் என தெரிவித்த பொது ஜன பெரமுன

**நாமல் ராஜபக்ஷ அவர்களின் வழக்கு: உள்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க போராடியதன் விளைவு என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க**
இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் வழக்கு, உள்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாகவே நிகழ்ந்தது எனத் தெரிவித்தார்.
இன்று (29) பொதுஜன பெரமுன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஹம்பாந்தோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் பங்கேற்காமல், நாமல் ராஜபக்ஷ நேற்று (28) வெளிநாடு சென்றது குறித்து வினவப்பட்டபோது, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு வாரண்ட் மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்திற்கு ஆஜராகாததற்காக வழங்கப்பட்ட ஒரு உத்தரவு. உள்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க அவர் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் நீதிமன்றத்திற்கு ஆஜராகவில்லை என்பதே முக்கியமாக எழுந்துள்ள விடயம்,” என்றார்.
நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாக கூடியதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
உங்கள் கட்சி தலைமைகளுக்கு தற்போது பிரச்சினையாக உள்ளது ஏன் உங்களின் நேரம் சரியில்லையா என அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த சி.பி. ரத்நாயக்க,
நேரம் சரியில்லை என்று இல்லை….
எதிர்க்கட்சியை அடக்கி ஆள பார்க்கிறார்கள்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நெல்சன் மண்டேலாவை 19 முதல் 22 வருட காலம் சிறையில் வைத்திருந்தனர்.
அவரை சிறையில் நசுக்கி வைத்து இருந்தாலும் அவர் அந்த நாட்டின் ஜனாதிபதி ஆனார்.
அதேபோல் மார்க்கோசுக்கு செய்யாத அநியாயமா? இன்று அவரின் புதல்வர் தான் நாட்டை ஆள்கிறார்.
இது போல் போராளிகளை அடக்கி ஆள் நினைத்தால் அவர்களின் சக்தியை அதிகார வர்க்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

