இஸ்ரேல் எல்லையில் பலஸ்தீன் நாடு இன்று உருவானால் நாளை அது உங்களுக்கே பெரும் அச்சுறுத்தலாக அமையும் என பலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்போவதாக தெரிவித்த பிரித்தானியாவுக்கு நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவிப்பு

இஸ்ரேல் – காஸா போர்நிறுத்தம் தொடர்பாக பிரித்தானியா முன்வைத்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் வரும் செப்டம்பா் மாதம் பலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரித்தானியா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவின் இந்த செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
உங்களின்(பிரித்தானியா) இந்த முடிவு பிற்காலத்தில் உங்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் இந்நாடு இன்று உருவானால் நாளை அது பிரித்தானியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
பலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தும். தீவிரவாதிகளை சமாதானப்படுத்தும் உங்கள் நடவடிக்கை எப்போதும் தோல்விதான். அது உங்களுக்கும் தோல்வியை தரும். அது நடக்காது.
இதன் மூலம் ஹமாசின் கொடூர செயல்களுக்கு வெகுமதி அளித்து, பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கிறீர்கள் .இவ்வாறு நெதன்யாகு பதிவிட்டுள்ளார்.

