News

அதிபர் உள்ளிட்ட நான்கு பேரின் அடாவடி – ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதி

பதுளை மாவட்டம் வெளிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடப்புஸ்ஸலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றும் டெல்மார் தோட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பில் அதே பாடசாலையில் கடமையாற்றும் உப அதிபர் உட்பட நால்வர் ஊவா பரணகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்த கைது சம்பவம் (15)  இடம்பெற்றதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.



ஆசிரியை மீதான இந்த தாக்குதலில் தான் பணியாற்றும் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட அவருக்கு உதவியாக ஆசிரியர்கள் ஈடுப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை ஊவா பரனகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



குறித்த தாக்குதல் சம்பவம் (13.08.2024) செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது இதன்போது தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அதேநேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உடப்புஸ்ஸலாவை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த சம்பவத்தில் தன்னை தாக்கியவர்கள் தொடர்பில் தன்னால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியை தெரிவித்துள்ளார்.



மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

கடந்த ஐந்து வருடங்களாக குறித்த பாடசாலையில் கடமையாற்றி வரும் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியைக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்க பாட நேர அட்டவணை வழங்கப்படாது பாடசாலை அதிபரால் ஓரங்கட்டப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.



அதேநேரத்தில் பாடசாலையில் ஆசிரியராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ள அதிபரின் மகனுக்கு கூடுதலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பாடசாலையின் கற்றல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.



இந்த நிலையில் பாடசாலையில் மேலதிக ஆசிரியர்கள் சேவைக்கு உள்ளதாக கூறி பாடசாலை அதிபர் பாதிக்கப்பட்ட ஆசிரியையை இடம்மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.



அதே சந்தர்ப்பத்தில் அத்துமீறிய இடமாற்றத்தை கண்டித்து குறித்த ஆசிரியை கல்வி திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளதுள்ளார்.



ஆனால் நாளுக்கு நாள் பாடசாலை அதிபரின் செயற்பாட்டை தாங்கக்கூடிய முடியாத ஆசிரியை அத்துமீறிய இடமாற்றத்தை தடுக்க சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் வழக்கு தொடர்ந்து இடமாற்றத்தை தடை உத்தரவையும் பெற்றுள்ளார்.



இவ்வாறான செயற்பாட்டினால் ஆத்திரம் கொண்ட அதிபர், உப அதிபர் உள்ளடங்களாக ஆசிரியர்கள் என நால்வர் ஆசியையை பழிவாங்கும் விதத்தில் ஆசிரியைக்கு பாடங்கள் கற்பிக்க இடம் கொடுக்காமலும் பாடசாலை வகுப்பறையில் அமருவதற்கும் கூட இடம் கொடுக்காது கொடுமை செய்துள்ளனர்.



இது விடயமாக குறித்த ஆசிரியை பாடசாலை அதிபரிடம் வினவியபோது ஆத்திரம் கொண்ட அதிபர் ஆசிரியையை அவருக்கு தேவையான ஆசிரியர்களை வரவழைத்து தாக்கியுள்ளதுடன், பாடசாலை அறை ஒன்றில் சிறை வைக்கப்பட்டதாகவும் ஆசிரியை பொலிஸாருக்கு முறையிட்டுள்ளார்.



இந்த முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்திய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக தெரிவித்தனர்.



ஆ.ரமேஸ்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button